அடக்குமுறைச் சட்டங்களை அமுலாக்க இடமளியோம்: மக்கள் போராட்ட முன்னணி சூளுரை

“தடுப்புக்காவல் உத்தரவுக்கான காலத்தைக் குறைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையல்ல. இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். எனவே, அரசாங்கம் குறித்த சட்டமூலங்களை மீளப்பெறாவிட்டால், அவற்றைத் தோற்கடிப்பதற்காக மக்கள் அணிதிரள வேண்டும்” என்று மக்கள் போராட்ட முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான நுவான் போபகே மேலும் கூறியதாவது:

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராகவே சமூகத்தில் கருத்துகள் எழுந்துள்ளன. இவ்விரு சட்டமூலங்களுக்கும் எதிரான முழுமையான எதிர்ப்பையே மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், நிலைமை இவ்வாறு இருக்கையில், தடுப்புக்காவல் கால எல்லையைக் குறைப்பது பற்றியும், பச்சை குத்தும் விவகாரம் பற்றியும் ஜனாதிபதி பேசுகின்றார். இந்த இரு சட்டங்களும் தேவையில்லை என்பதே சமூகத்தின் நிலைப்பாடாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சாதாரண மக்களுக்காகச் செயற்படவில்லை. மாறாக, தனவந்தர்களின் தேவைகளுக்காகச் செயற்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

தொழிற்சங்க நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்களைக்கூட பயங்கரவாதச் செயல்களாகச் சித்தரிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய சட்ட ஏற்பாடுகளில் உள்ளன. ஆளும் தரப்பினரால் தமக்கு எதிரான தரப்பினரைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க முடியும்.

எனவே, இந்தப் பயங்கரமான சட்டமூலங்களைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்” என்றார்.

Related Articles

Latest Articles