” ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது. எனவே, அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்று அமையவே மக்கள் ஆணை வழங்க வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது கட்சி தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தீர்க்கதரிசனமாகக்கூறிய பல விடயங்கள் தற்போது உண்மையென நிரூபனமாகிவருகின்றன. அதனால்தான் தனி ஒருவராக நாடாளுமன்றம்சென்று, முழு நாட்டையே நிர்வகிக்கும் வகையில் தற்போது தீர்மானங்களை எடுத்துவருகின்றார்.
இன்று வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மின்வெட்டு அமுலில் இல்லை. மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பமாகும். இனிதான் யானையின் பலம் தெரியவரும்.
ஜனாதிபதியின் பின்னால் பலர் அணிதிரள்கின்றனர். பலர் எதிர்காலத்தில் இணைவார்கள். மொட்டு கட்சியும் ஜனாதிபதியிடம் வேலைத்திட்டத்தை அனுமதிக்கின்றனர். எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பலமுனை போட்டி இருக்காது. ” – என்றார்.
