இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முதற்கட்ட பேச்சு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.
இன்று வியாழன் மற்றும் நாளை வெள்ளிக்கிழமை நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்டுத்தும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தரப்பில் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே நேரத்தில் சந்திக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வட மாகாண எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது. ஆனால், இந்த சந்திப்பில் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி அந்த முடிவை மாற்றியுள்ளதாக கூட்டமைப்பு தரப்பினர் தெரிவித்தனர்.
இதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு – கிழக்கின் தனியலகு தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அந்த ஒப்பந்தத்தின் பிரகாரமே இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தெரிவித்துள்ளார்.










