20 வருடங்களாக வாழ்ந்து வந்தும், அந்தக் காணியின் சட்டபூர்வ உரிமையற்றிருக்கும் மகாவலி மக்களுக்கு அந்த உரிமையைப் பெற்றக்கொடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை அரசாங்கம் என்ற வகையில் உணர முடிகின்றது என, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஒரு இலட்சம் மகாவலி ரண்பிம காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு, இன்று (26) முற்பகல், எம்பிலிபிட்டிய மகாவலி மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
இரசாயனப் பசளை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அடுத்து, புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சியினர், விவசாய மக்களை வீதிக்கு இறக்கினர். பயிர்ச் செய்த வயல்களுக்கு தீயிட்டுப் பயிர்களை அழித்துச் செய்த போராட்டங்கள் என்பன, விவசாயி மீதுள்ள அன்பால் செய்யப்பட்டவை அல்லவென்றும் இதன்மூலம் அவர்கள் அரசியல் இலாபம் பெறவே முயற்சித்தனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
காணி உரித்துரிமையை வழங்குவதால் மாத்திரம் மகாவலி விவசாய மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வை எட்டப்போவதில்லை என்று இதன்போத தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்ச, , தேசத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, அனைத்து விவசாயக் காணிகளிலும் பயிர்ச் செய்கையை மேற்கொள்வது விவசாய மக்களின் கடமையென்றும் தெரிவித்தார்.
மகாவலி வலயத்தின் மூன்றாவது தலைமுறையினரை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருக்கின்றதென்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
