” அஸ்வசும இரண்டாம் கட்டத்துக்கு வறுமை மாத்திரமே அளவுகோலாக இருக்க வேண்டும்”

ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ள அஸ்வசும வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு வறுமை ஒரே அளவுகோலாக இருக்கவேண்டும் எனவும், வறுமையை கணிப்பிடுவதற்கு குறைந்த அளவுகோல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அஸ்வசும முதலக்கட்டம் தோல்வியடைவதற்கு எடுத்துக்கொள்ளப்பட அளவுருக்கள் அதிகமானதாக இருந்தமை மற்றும் அந்த அளவுருக்களுக்கு வழங்கப்பட்ட எடை காரணமாக இருந்ததாக குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

அஸ்வசும சமூக நலன்புரி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கண்டறிவதற்கு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு கூடிய போதே குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், வறுமையை அளவிடுவதற்கு மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மின்சார அலகுகள் 30க்கு குறைவான மின்சாரப்பாவனை எனும் அளவுருவை இதற்குப் பயன்படுத்த முடியும் என்றும், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து அந்த அளவுருவைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

அத்துடன், மின்சாரக் கட்டணம் எனும் அளவுருவுக்கு 60% வீதத்தையும், வறுமையை மதிப்பிடுவதற்கு பயன்படும் ஏனைய அளவுருக்களுக்கு 40% எடையையும் வைக்குமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

நலன்புரி நன்மைகளை மூன்று மடங்கு அதிகரித்தாலும், அரசாங்கத்துக்கோ நலன்புரி நன்மைகள் சபைக்கோ மக்களின் வரவேற்பு இல்லாமைக்குக் காரணம் பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் இடம்பெற்ற பலவீனங்கள் எனச் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்குப் பொருத்தமான அளவுருக்கள், கல்வி கற்று வேலையில்லாமல் இருக்கும் 20% வீதத்துக்கும் அதிகமானவர்கள் உள்ள இலங்கைக்குப் பொருத்தமானது இல்லை என வலியுறுத்தினார்.

2023 ஜூலை மாதத்தில் 1,367,524 அஸ்வசும பயனாளிகளுக்கு 8,525,999,000 ரூபாய் நிதியும், ஆகஸ்ட் மாதத்தில் 1,365,076 பயனாளிகளுக்கு 8,496,698,750 ரூபாய் நிதி செலுத்தப்பட்டுள்ளதாக இதன்போது புலப்பட்டது. 2024 வரவுசெலவுத்திட்டத்தில் அஸ்வசும வேலைத்திட்டத்துக்கு 180.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய இரண்டு மில்லியன் பேருக்கு இந்த நலன்புரியை வழங்கமுடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அஸ்வசும தொடர்பில் மேன்முறையீடு 1,000,000 கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில் இதுவரை 200,000 மாத்திரம் முடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவற்றில் 119,794 அளவு வேலைத்திட்டத்துக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், 4655 அளவான மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளன.

அஸ்வசும மற்றும் சமுர்த்தி பயனாளிகள் தற்பொழுது 18 இலட்சம் பேர் உள்ளதாகவும், அவற்றில் 395,000 சமுர்த்திப் பயனாளிகள் அஸ்வசும வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்றும் இதன்போது புலப்பட்டதுடன், அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய டிசம்பர் மாதம் வரை இந்த அனைவரும் நலன்புரி நன்மைகளைப் பெறுவதாக இதன்போது புலப்பட்டது. அவர்களுக்கும் இதுவரை அஸ்வசும வேலைத்திட்டத்துக்கு விண்ணப்பிக்காத சமுர்த்தி பயனாளிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் அஸ்வசும இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் முறைமைக்கு கிராமிய மட்டத்திலான விசேட அதிகாரிகள் தேவைப்படுவதுடன், அதற்குப் பிரத்தியேகமான அதிகாரியொருவர் இருப்பது அத்தியாவசியம் என நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். கிராம உத்தியோகத்தர்களின் சேவை யாப்பு தொடர்பான சிக்கலை பொது நிர்வாக அமைச்சின் ஒருங்கிணைப்பில் தீர்த்து மேன்முறையீட்டு செயன்முறையில் அவர்களையும் சேர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles