ஆசிய கிண்ணத் தொடரை இரு நாடுகளில் நடத்தும் கலப்பு முறை திட்டத்திற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்படும் ஆசிய கிண்ணத் தொடரில் அரசியல் பிரச்சினை காரணமாக இந்தியா வர மறுத்த நிலையிலேயே இந்திய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஏஞ்சிய போட்டிகளை பாகிஸ்தானிலும் நடத்தும் திட்டத்தை பாக். கிரிக்கெட் சபை பரிந்துரைத்தது.
எனினும் இது ஏற்பாட்டியல் ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று ஆசிய கிரிக்கெட் கெளன்சில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு ஒரு மாதத்திற்கு முன் வரும் செப்டெம்பர் மாதமே ஆசிய கிண்ண தொடரை நடத்த ஏற்பாடாகியுள்ளது. எனினும் போட்டிக்கு இடையே இரு நாடுகளுக்கு பயணிப்பதன் ஏற்பாட்டில் பிரச்சினை மற்றும் செப்டெம்பர் முதல் பாதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிலவும் கடும் வெப்பம் குறித்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
“இந்த கலப்பு முறையை எதிர்ப்பதாக ஆசிய கிரிக்கெட் கெளன்சிலுக்கு நாம் எழுதியுள்ளோம்” என்று இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் மொஹான் டி சில்வா கிரிக்கின்போ இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். “என்றாலும் இதற்கு அப்பால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடும் வெப்பமான காலநிலை இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாகிஸ்தானில் ஆடுவதில் ஆட்சேபனை இல்லை என்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகள் உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பாக். கிரிக்கெட் சபை, கடந்த ஆசிய கிண்ண தொடரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டெம்பர் மாத காலப்பகுதியிலேயே ஆடியதாக சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் பொதுவான இடமாக இம்முறை ஆசிய கிண்ணத்தை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. “தொடரை இலங்கையில் நடத்த வாய்ப்பு கிடைத்தால் அதனை செயற்படுத்த தயாராக இருக்கிறோம். பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக போட்டியை நடத்தும் நாடாக இருக்கும்” என்று டி சில்வா குறிப்பிட்டார்.
எனினும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக உள்ளது. “பாகிஸ்தான் மற்றும் பொது இடம் என்ற முறை நிராகரிக்கப்பட்டால் நாம் ஆசிய கிண்ணத்தில் ஆடமாட்டோம் என்பதை சபை மீண்டும் வலியுறுத்துகிறது” என்று பாக். கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.










