தலவாக்கலையில் கடந்த 23 ஆம் திகதி மரக்கிளை முறிந்து விழுந்ததால் பலியான ஆசிரியருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சம்பவம் நடைபெற்ற அதே இடத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் லோகி தோட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த அமைதியான ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் வரை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆசிரியருக்கு நீதி கிடைக்க வேண்டும் , பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய முறையில் நஷ்ட ஈடு பெற்றுக்கொடுக்க வேண்டும், தனியார் வசம் இருக்கும் கோவில் அரசுடைமையாக்கப்பட வேண்டும், பொறுப்புகளை தட்டிக் கழித்த சகல அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப் படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 200 வருட கால பழமை வாய்ந்த ஆழமரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரி மற்றும் உரிய முறையில் முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் அலட்சியமாக செயற்பட்ட பலரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசிரியரின் ஆத்ம சாந்திக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். மேலும் ஆசிரியருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி உட்பட அரச அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்று கையொப்பம் இடும் நிகழ்வும் நடைபெற்றது.
நிருபர் – கெளசல்யா
