திம்புல – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் தோட்ட மக்கள், மயானத்தில் குவிந்து இன்று (17) காலை கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொட்டக்கலை நகரில் இருந்து சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திலேயே ஹரிங்டன் என அழைக்கப்படும் 50 ஏக்கர் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.
இத்தோட்டத்தில் தற்போது 150 பிரதான குடும்பங்கள், 100 உப குடும்பங்கள் என சுமார் 250 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன.
ஹரிங்டன் தோட்டம் 1977 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து தனியார் ஒருவரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதுடன், இன்றும் இத் தோட்டம் தனியாரின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத் தோட்டத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள், தோட்ட தனியார் உரிமையாளரின் முகாமைத்துவத்தின் கீழ் தமது தோட்டத் தொழிலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
அதேசமயத்தில் தற்போது ஹரிங்டன் தோட்டத்தின் தேயிலை நிலங்களை பராமரித்து வந்த தனியார் நிர்வாகத்தினர் அத் தோட்ட நிலங்களை கட்டம் கட்டமாக பிரித்து வெளியிட வாசிகளுக்கு விற்பனை செய்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் மக்கள் குடியிறுப்பு பகுதிகளுக்கு எந்தவோர் பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என்றாலும் இத் தோட்டத்தில் பொது மயானத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இலக்கம் 01 தேயிலையின் 03 ஏக்கர் நிலப்பகுதியை தற்போதைய தோட்ட உரிமையாளர்கள் வெளியிட வாசிகளுக்கு விற்பனை செய்துள்ளனர் என தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தோட்ட மக்கள், பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்திருந்த பொது மயானத்தில் அமைப்பட்டிருந்த கல்லறைகள் உடைக்கப்பட்டு அங்கு “பெகோ” இயந்திரங்கள் ஊடாக மண் குவிக்கப்பட்டு, பொது மயான அடையாளத்தை அழித்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் இத்தோட்டத்திற்கென உழைத்து உயிர் விட்ட மக்களின் புதை குழி இடம் அழிக்கப்படுவதற்கு இடம் கொடுக்க முடியாது என்றும் இத் தோட்டத்தில் எஞ்சி வாழ்பவர்களும் இறந்து போனால் இவ்விடத்தில் தான் புதைக்க வேண்டும் ஆகையால் பொது மயானத்திற்கு உரிய மூன்று ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டாம் என போராட்டத்தில் குதித்துள்ளதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இத் தோட்டத்தின் ஏனைய நிலங்களை பிரித்து விற்பனை செய்வதற்கு தாம் எதிர்ப்பு காட்டவில்லை அதேநேரத்தில் எமக்கான மயான பூமி இடத்தை விட்டுக் கொடுக்க தாம் தயாரில்லை என மக்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த விடயம் தொடர்பில் தோட்ட உரிமையாளர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் , பொது மயானத்தில் அமர்ந்து தமக்கு உரிய தீர்வு கிட்டும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என எனவும் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இவ் விடயம் அறிந்து திம்புள-பத்தனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை செய்து வரும் நிலையில் , மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொது செயலாளர் புஷ்பா விஸ்வநாதன் களத்திற்கு சென்று மக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
அதேசந்தர்ப்பத்தில் பொது மயான ஆக்கிரமிப்பு தொடர்பில் அத் தோட்ட மக்கள் திம்புள-பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஷ்