இனப் பிரச்சினைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது சாத்தியமடையாது என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் மக்களுடன் மாத்திரம் பேச்சு நடத்தாது சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டுதான் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிங்கள பெரும்பான்மை மக்கள் கையிலேயே அதற்கான தீர்வு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
நாட்டின் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை அமைந்திருந்தது. நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலையில் பொருளாதாரத்தை எவ்வாறு மீள கட்டி யெழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அனைவரும் இணைந்துசெயல்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மலையக மக்கள் தொடர்பில் அவர் பல விடயங்களை குறிப்பிட்டார். அவற்றை நடைமுறைப்படுத்தினால் நாம் அதனை வரவேற்போம்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை புறக்கணித்தாலும் அதனோடு இணைந்து இருந்த கட்சிகள் என்ற வகையில் நாம் அதில் பங்கெடுத்துக் கொண்டோம். ஐக்கிய மக்கள் சக்தி இதில் கலந்து கொள்ளாது. எனினும் அதனோடு இணைந்த ஏனைய கட்சிகள் இந்த அமர்வில் கலந்து கொள்வதில் ஆட்சேபனை கிடையாது என எமக்கு தெரிவிக்கப்பட்டது.
அதற்கிணங்கவே நாம் கலந்து கொண்டோம். மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதே வேளை, 13வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக ஜனாதிபதி வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து தமிழ் தரப்பினரோடும் பேச்சு நடத்தி அத்துடன் சிங்கள மக்களின் இணக்கப்பாட்டையும் அதற்காகப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். சிங்கள மக்களின் ஒத்துழைப்புடனேயே இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் ஒருபோதும் அது சாத்தியப்படாது. இலங்கையில் உள்ள நான்கு சமூகத்தை சேர்ந்த மக்களுடன் மலையக மக்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்து வரவேற்கத்தக்கது அந்த வகையில் எம்மை மலையக மக்கள் என அழைப்பதையே நாம் விரும்புகின்றோம்.” – என்றார்.
