“ பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களே, நீங்கள் மாறுங்கள் இல்லையேல் நாங்கள் உங்களை மாற்றுவோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து பெருந்தோட்ட நிறுவனங்கள் போராடிவருகின்றன.
பெருந்தோட்ட நிறுவனங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கான சாதாரண சம்பள உயர்வைக்கூட உயர்நீதிமன்றம்வரைசென்று தடுத்து நிறுத்தும் மனப்பான்மைதான் நிறுவனங்களிடம் காணப்படுகின்றன. இது மிகவும் கேவலமான – மக்களை அச்சுறுத்தும் நிர்வாகமாகும்.
பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களே, நீங்கள் மாறுங்கள் இல்லையேல் நாங்கள் உங்களை மாற்றுவோம்.
பாட்டி வடை சுடும் கதை பழைய கதை. அது எங்களுக்கு தேவை இல்லை. தற்போதைய சூழ்நிலையில் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள உயர்வு அவசியம். அதற்காக ஜனாதிபதி தலைமையில் பேச்சு நடத்தகூட தயார். அவ்வாறு இல்லையேல் மக்கள் வஞ்சிக்காது, சில கசப்பான முடிவுகளை எடுக்க நேரிடும்.” – என்றார்.