இலங்கையில் ராடர் தளம் அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வின்போது,
” இலங்கையில் சீனா ராடர் தளம் அமைக்கவுள்ளது என வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறான அனுமதி எதுவும் வழங்கப்பட்டுள்ளதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அவ்வாறு அனுமதி வழங்கப்படவில்லை.
இது தொடர்பில் கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நாம் அனுமதி வழங்கவில்லை என்பது தெளிவு. கோரிக்கை வந்தால்கூட, அது தொடர்பில் ஆராய்ந்தே உரிய வகையில் முடிவெடுக்கப்படும். ” – என்றார்.
அதேவேளை, புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அலி சப்ரி,
” சட்டமூலத்தில் இணங்கமுடியாத சில விடயங்கள் உள்ளன. இது தொடர்பில் அமைச்சரவையில் கூறினேன். பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தடுப்பு உத்தரவு வழங்கும் அதிகாரம் ஏற்புடையது அல்ல. அது குறைந்தபட்சம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்காவது இருக்க வேண்டும்.” – என்று கூறினார்.










