லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயத்தின் 150வது ஆண்டு விழா

நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகத் திகழும் லிந்துலை புனித சென் ஜோன் தேவாலயம் தனது 150வது ஆண்டு நிறைவை இன்று (25) சிறப்பாகக் கொண்டாடியது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை முன்னிட்டு விசேட திருப்பலியும் நன்றியறிதல் ஆராதனையும் மறைமாவட்ட ஆயர் மேதகு துசாந்த ரொட்ரிகோ ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

லிந்துலை பங்குத்தந்தை அருட்திரு சால்ஸ் டேவிட் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விசேட தேவ ஆராதனையில், நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கம் மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் இறைவனின் அருளும் இயற்கை ஆசீர்வாதங்களும் கிடைக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தேவாலயத்தின் 150 ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நினைவுக் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அருட்திரு நிசாந்தி குமாரி சகோதரி, குருமார்கள், அருட்சகோதரிகள், திருச்சபை பிரதிநிதிகள் மற்றும் லிந்துலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ விசுவாசிகள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டனர்.

150 ஆண்டுகால ஆன்மீகப் பயணத்தை நினைவுகூரும் இந்த விழா, இறைநம்பிக்கை, சமூக ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வெளிப்படுத்திய சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

மலைவாஞ்ஞன்

Related Articles

Latest Articles