அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை இந்த ஆண்டின் இறுதியுடன் நிறுத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் Fox & Friends தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 4 பில்லியன் டொலர்களை வழங்கி வருகின்றோம். இதனை நிறுத்துவது தொடர்பில் நானும் நெதன்யாகுவும் சில மாதங்களுக்கு முன்னரே இணக்கமொன்றுக்கு வந்துள்ளோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலுக்கான நிதி வழங்கலை நிறுத்துவதற்கு ஏற்கனவே தீர்மானித்துள்ளோம். எனினும், இஸ்ரேலுக்கு உதவி தேவைப்பட்டால் அமெரிக்கா உதவும்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுக்கு இந்த நிதி இனி அவசியமில்லை என்றும், அமெரிக்காவின் நிதியுதவியைப் பயன்படுத்தி சில ஜனநாயகக் கட்சியினரும் இடதுசாரி அரசியல்வாதிகளும் குடியரசுக் கட்சியினரை விமர்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள 4 பில்லியன் டொலர் நிதி எந்த வகையான உதவியைக் குறிக்கிறது என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை.
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் 2028ஆம் ஆண்டில் காலாவதியாகவுள்ள நிலையில், அதற்குப் பின்னர் அமெரிக்காவின் உதவி எவ்வாறு தொடரும் என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடந்த மே மாதம் வழங்கிய நேர்காணலில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அமெரிக்காவின் இராணுவ உதவியைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
காசா போர் ஆரம்பமான 2023ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கப் பொதுமக்கள் மத்தியில் இஸ்ரேலுக்கான ஆதரவு குறைந்துள்ளதாகவும், குறிப்பாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் இந்த மாற்றம் அதிகமாகக் காணப்படுவதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.










