நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு என்றாவது ஒருநாள் சிறைச்சாலையில் ஜம்பர் அணிவிக்கப்படும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நீதி அமைச்சர் , நீதிமன்றத்தை மதிக்க வேண்டும். கருத்துகளை வெளியிடும்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தியால்தான் மஹிந்தானந்த சிறைக்குள் சென்றார் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளி தொலைக்காட்சியில் வெளியானது. நீதிபதிகள் மூவர்தான் தீர்ப்பை வழங்கி இருந்தனர். அவர்களை அவமதிக்கும் வகையில் நீதி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்துள்ள அவருக்கு நிச்சயம் ஜம்பர் அணிவிக்கப்படும். நீதிமன்றத்துக்கு எதிராக கதைத்ததால் எஸ்.பி. திஸாநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு ஜம்பர் அணிவிக்கப்பட்டது. எனவே, உங்களுக்கும் (நீதி அமைச்சர்) நிச்சயம் ஜம்பர் அணிவிப்போம். என்றாவது ஒருநாள் அதனை செய்வோம்.” – என்றார் சாமர சம்பத் தஸநாயக்க.
‘ நான் ஆற்றிய உரையில் ஒரு பகுதியை மட்டுமே தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. நான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால் முறையிடலாம். எதிரணிகள் போலி பிரசாரத்தை கைவிடவேண்டும்.” – என்று நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
