எட்டாவது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று விஜயம் செய்தார்.
இதன்போது, தாய்மொழிக் கூட்டமைப்பு மற்றும் திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எஸ்.டி.குமார், கடந்த ஜூலை 5ஆம் திகதி பெங்களூருவில் ஏழாவது திருக்குறள் மாநாடு நடைபெற்றதாகவும், இதில் இந்தியா மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும், எட்டாவது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கை அரசின் ஏற்பாட்டில், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், அதற்கு கர்நாடக தமிழ் அமைப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், குறித்த கோரிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், எட்டாவது உலக திருக்குறள் மாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் உறுதியளித்தார்.
