” தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக மாவட்ட ரீதியில் நடத்தப்படும் கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் பங்கேற்பார்.” – என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கட்சியின் தொடர்ச்சியான அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாவட்ட ரீதியிலான கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், கிராமம் மற்றும் தொகுதி வாரியாக கட்சி மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தையும் கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கருத்து நிலவுவதாகக் கூறிவரும் எதிர்க்கட்சிகளுக்குச் சவால் விடுத்த அமைச்சர்,
“இரவு வேளைகளில் ஜி.எல்.பீரிஸின் வீட்டில் ஒன்றுகூடிச் சூழ்ச்சி செய்வதை விடுத்து, தைரியமிருந்தால் வீதிக்கு இறங்குமாறு அவர்களுக்குக் கூறுங்கள். பகிரங்கக் கூட்டங்களை நடத்தி மக்களைத் திரட்டிக்காட்டுமாறு சொல்லுங்கள்” என அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது முன்னெடுத்த போராட்ட வேலைத்திட்டங்களை அவர்கள் பார்த்துச் சற்று கற்றுக்கொள்ளட்டும்” என்றும் சுட்டிக்காட்டினார்.










