அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்கள் அவர்களின் வரையறைக்குள் நின்று செயல்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய ஆளுநர்களின் நியமனம் குறித்து குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறித்து சமூக, நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் நாம் விசனமடைந்துள்ளோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்பொழுதும் சமூக செயற்பாட்டாளர்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களைக் கொண்டு நடத்துபவர்களையும் விமர்சனம் செய்து விதண்டாவாதத்துக்கு வித்திடுவதில்லை . அரச சார்பற்ற நிறுவனங்களால் சமூகத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுமாக இருந்தால் அதற்கு வழிவிட வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கையாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த ஒரு கட்சியினதும் கை பொம்மையாக செயல்பட்டது கிடையாது. மக்கள் பலத்தின் ஊடாக அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பேரம் பேசி மலையக மக்களுக்கு இந்த நாட்டில் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
வெளிநாடுகளின் தேவைகளுக்காக போராட்டங்களை வடிவமைத்து ஆர்ப்பாட்டம் செய்து சர்வதேச நிறுவனங்களுக்கு அறிக்கைகளை சமர்ப்பித்து விட்டால் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களின் தேவைக்கேற்ப அரசியல் ரீதியாக காய் நகர்த்தி அதன் மூலம் மலையக சமூகத்திற்காக பாரிய அனுகூலங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தேவை ஏற்படும்போதெல்லாம் போராட்டம் நடத்தி இருக்கிறோம். அவற்றில் பல வெற்றிகளையும் கண்டிருக்கிறோம். எனினும் எமது மக்களின் உரிமைகளும் தேவைகளும் இன்னும் முழுமை அடையவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் . ஆனால் மக்களுக்காக எதையும் செய்யாமல் விமர்சனத்தை மட்டுமே ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசை கொச்சைப்படுத்துவதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம் என எவரும் எதிர்பார்க்க கூடாது.
செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதை இந்த நாட்டின் சிறுபான்மை இன மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இதில் சில மனநோயாளர்கள் மற்றும் காற்புணர்ச்சியாளர்களினது கருத்துக்களை கணக்கிலெடுக்க வேண்டியதில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செந்தில் தொண்டமானை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்ததில் மலையக சமூகம் பெருமை கொள்கிறது.
இலங்கை வரலாற்றில் இதுவரை இவ்வாறான உயர் பதவி ஒன்றுக்கு மலையக சமூகத்தை சேர்ந்த எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. என்பதுடன் கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ் ஆளுநர் செந்தில் தொண்டமான் என்பதை விமர்சனம் செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் ஆளுநராக நியமிக்கப்பட்ட வர் இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் செயல்படுபவராகவும், அதே நேரத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் கடமை புரிய வேண்டும். இதை சவாலுக்கு உட்படுத்துவது ஒரு சிறுபிள்ளைத்தனமான விடையமாகும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மதவாதம் இனவாதம் போன்ற சமூக சீரழிவு வாதங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. அருட்தந்தை சக்திவேல் இதை அறியாமல் இருப்பது கவலைக்குரியது. எது எவ்வாறாயினும் சமூக ரீதியாக செயல்படுகின்ற சமூக சேவை நிறுவனங்கள் அவரவர் வரையறைகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது. பல்லின, பல மத மக்கள் வாழுகின்ற கிழக்கு மாகாண போன்ற மாகாணங்களில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பற்ற சமூக சேவை நிறுவனங்களும் அந்நிறுவனங்களை வழிநடத்துபவர்களும் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அதுவே இந்நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்ததாகவும் அமையும். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.










