ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் ஜுலை 6ஆம் ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஏற்றப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 27/2 கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
” ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 6 ஆம் திகதிவரை ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் 924,687 பேருக்கு முதல் தடுப்பூசியாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் பிரகாரம் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு 12 வாரங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் போது மிகவும் வீரியமான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கப்பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதல் சுற்றில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 23 ஆம் திகதிமுதல் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும். ஏப்ரல் 23 ஆம் திகதியின் பின்னர் கட்டங்கட்டமாகவே இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாவது தடுப்பூசியை வழங்குவதற்காக 356,730 தடுப்பூசிகள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவிடம் கையிருப்பில் உள்ளன.
924,687 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியை தற்போதைய சூழலில் வழங்க வேண்டியுள்ளது. இரண்டாவது தடுப்பூசியை வழங்க கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக 567,000 எக்ஸ்ட்ரா செனாகா தடுப்பூசிகளை தேவைப்படும். இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உரிய துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
எதிர்வரும் வாரங்களில் குறித்த தடுப்பூசி தொகை கிடைக்கும். ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனாகா தடுப்பூசிகள் அனைத்தும் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்படும். அந்நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளே முதல் சுற்றில் ஏற்றப்பட்டன.
அதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்தப் பின்னர் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது குறித்து தேசிய ஒளடதங்கள் அதிகாரசபை தீர்மானம். தற்போது இந்த தடுப்பூசிகளை இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ” – என்றார்.