ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் இலக்காகும்: ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மட்டுமன்றி, இதுவரை தாக்கப்படாத தொலைதூரப் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தளங்களும் இலக்கு வைக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளரும், ஜெனரலுமான மொஹ்சென் ரெசாயி, லெபனானின் அல் மயாதீன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் போர் விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்து புறப்பட்டால், அந்தத் தளங்களும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் முதன்மையான நோக்கம், அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகும் என்றும், குறிப்பாக லெபனானில் இடம்பெறும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈரான் ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும், அதற்கான அமெரிக்காவின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைத், ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒன்றியமொன்றை உருவாக்குவதில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, அரபு நாடுகளின் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் மொஹ்சென் ரெசாயி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles