இலங்கையின் 1990 சுவசெரிய தேசிய அவசர அம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 100 ஆம்புலன்ஸ்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 1,725.73 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் இந்த அம்புலன்ஸ்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு இடையில் நேற்று (11) பரிமாறிக்கொள்ளப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற முதலாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்த இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
இலங்கைத் தலைமையின் கோரிக்கைக்கு அமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், சுவசெரிய சேவையின் தற்போதைய ஆம்புலன்ஸ் தொகுதியில் மேலும் 100 முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட அம்புலன்ஸ்கள் இணைக்கப்படவுள்ளன. இதன்மூலம் அவசர அழைப்புகளுக்கான பதிலளிப்பு நேரத்தை 10 நிமிடங்களுக்கும் குறைவாகக் கொண்டுவருவதே இலக்காகும்.
இந்தியாவின் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2016 ஜூலை மாதம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சுவசெரிய சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது 88 ஆம்புலன்ஸ்கள், ஒரு வருடத்துக்கான இயக்கச் செலவுகள் மற்றும் அவசர அழைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் மையம் ஆகியன வழங்கப்பட்டன.
பின்னர், 2018 ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இந்தச் சேவை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக இந்தியா மேலும் 15.02 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதுடன், 209 அம்புலன்ஸ்கள், அவற்றின் இயக்கச் செலவுகள் மற்றும் பயிற்சிச் செலவுகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் சுகாதாரத் துறையில் இந்தியா பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. டிக்கோயா வைத்தியசாலை நிர்மாணம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளின் மேம்பாடு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சைப் பிரிவு அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்குகின்றன.
மேலும், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ விடுதித் தொகுதி அமைத்தல் மற்றும் தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










