மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல்கள் கட்டம் கட்டமாக நடத்தப்படமாட்டாது. அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
வடக்கு, கிழக்கு உட்பட நான்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் அரசியல் வட்டாரங்களிலும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். தேர்தலை நடத்த வேண்டிய முறைமை தொடர்பில் தெரிவுக்குழு கலந்துரையாடி வருகின்றது. அந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
…………..
2027 ‘பட்ஜட்’டின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்துப் பரிசீலித்தார்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும் இதன்போது இணைந்துகொண்டார்.
‘டித்வா’ இயற்கை அனர்த்தம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நெருக்கடி போன்ற பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பாரிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும், முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் உயர்ந்த நிதிக்கட்டுப்பாட்டுடன் செயற்பட்டமையின் காரணமாக, நாட்டின் பல பிரதான பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைத் தற்போதைய அரசு அடைந்துள்ளது என்றும், அதற்கமைய, நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தும் இலக்கைத் தாண்டி, பொருளாதார விரிவாக்கம் மற்றும் மாற்றமிக்க அபிவிருத்தியைப் பிரதான இலக்காகக் கொண்ட 2 ஆயிரம் பில்லியன் ரூபா முதலீட்டு ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தப் பாதீட்டு ஆவணத்தை நாளை வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
…………
பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கைக்கு முக்கிய இடம் – தலைவராக நளிந்த தெரிவு

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் முதலாவது சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் தலைவராக இலங்கையின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (11) ஆரம்பமான இந்த மாநாட்டில், ஏழு பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கிய இந்த மாநாட்டில், பிராந்திய பொது சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துதல், அவசரகாலத் தயார்நிலை மற்றும் சுகாதாரத் தொழில்நுட்பங்கள், நிபுணத்துவங்களைப் பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதன் மூலம், பிராந்திய சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், உறுப்பு நாடுகளுக்கிடையிலான கூட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் இலங்கை தனது தலைமைத்துவப் பங்களிப்பை வெளிப்படுத்துவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொழும்பில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியக் குழுவின் 78ஆவது அமர்வின்போதும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற ஐந்தாவது ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டிலும் (UNESCAP MC-5) அவர் உப தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
…………..
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு ஒத்திவைப்பு!

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை பதில் நீதவான் கின்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காகவே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
……………
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (11) முற்பகல் திறந்து விடப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணிக்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்து விடப்படவுள்ளது.
இன்று காலை 10.15 மணியளவில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 701.3 மீற்றர் உயரத்தில் காணப்பட்டதுடன், அது வான் மட்டத்தை விட 1.7 மீற்றர் குறைவாகப் பதிவாகியிருந்ததாகப் பொறுப்புப் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
இருப்பினும், நிலவும் மழையுடனான வானிலை மற்றும் எதிர்கால வளிமண்டலவியல் கணிப்புகளுக்கு அமைய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யக்கூடிய மழைவீழ்ச்சியைக் கருத்திற் கொண்டு, நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தைச் சற்றே குறைத்து தாழ்நிலப் பகுதிகளில் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்காகவே இவ்வாறு வான் கதவுகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொத்மலை அணைக்கட்டிற்கு கீழ் உள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொறுப்புப் பொறியியலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
……………..
கஸ்ஸப தேரருக்கு பிடியாணை

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதை அடுத்து, பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
திருகோணமலை கடற்கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, கஸ்ஸப தேரர் மற்றும் வழக்கில் பெயரிடப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, கஸ்ஸப தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்த நீதவான், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கஸ்ஸப தேரர் அநுராதபுர புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக ருவன்வெலிசாய பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










