‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற கேள்விக்கு அன்றும், இன்றும், என்றும் பதிலாக திகழ்பவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நம்மைவிட்டு பிரிந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்றைய தலைமுறையினரும் அவருடைய புகழ் பாடுகிறார்கள் என்றால், மற்ற தலைவர்களிடம் இல்லாத தனித்தன்மை எம்.ஜி.ஆரிடம் நிரம்பியிருப்பதுதான் காரணம். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற தலைவராக திகழும் புரட்சித்தலைவரின் 3 தனித்தன்மைகளை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
உலகில் எந்த ஒரு தலைவரிடமும் இல்லாத ஒரு தனித்தன்மை புரட்சித்தலைவரின் ரத்தத்திலேயே கலந்திருந்தது என்றால், அது அவரது வள்ளல் தன்மை. ‘கடமை இருந்தால் வீரன் ஆகலாம், கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் – இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்’ என்ற அவரது பாடல் வரிகளுக்கு ஏற்ப புரட்சித்தலைவரே, வாழ்ந்து காட்டி வழி காட்டினார்.
ஏழை, எளியவர், நலிந்தவர், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், அடக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் கண்ணீரை துடைக்கும் கரங்களாக அவர் திகழ்ந்தார். அடுப்பில் உலை வைத்துவிட்டு, நம்பிக்கையுடன் ஒருவரது வீட்டில் போய் அரிசி வாங்கிவர முடியும் என்றால், அது புரட்சித்தலைவரின் வீடு மட்டும்தான் என்று அவரை அறிந்தவர்கள் சொல்லும் அளவுக்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக திகழ்ந்தார்.
குடிசை தீப்பற்றி எரிந்தாலும், வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டாலும், புயலில் சிக்கினாலும், விபத்தில் பாதிப்படைந்தாலும், அனாதை இல்லம், உடல் ஊனமுற்றவர்கள் என்றாலும், பூகம்பம், போர் நிவாரணம் என்றாலும் உதவி செய்யும் முதல் கரம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடையதுதான். இப்படி வாரிவாரி வழங்கிக்கொண்டு இருக்கிறீர்களே, உங்களுக்கு சேர்த்து வைக்க வேண்டாமா என்று நிருபர்கள் கேட்டபோது, ‘நான் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நாடக கம்பெனியில் 7 வயதில் நடிக்க வந்தேன். நான் வரும்போது எதையும் கொண்டுவரவில்லை.
எனவே நான் சம்பாதித்த அனைத்தையும் என்னை வாழ வைத்த இந்த மக்களுக்கே தர விரும்புகிறேன். ஏனென்றால் என் செல்வம் முழுக்க என்னுடைய ரசிகர்களிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் பெற்றவைதான்’ என்று கூறினார். அதன்படியே, மரணத்திற்கு பிறகு தன்னுடைய சொத்துகளை காது கேட்காத, வாய் பேச இயலாதவர்கள் பள்ளிக்கும், நினைவு இல்லத்திற்கும் எழுதி வைத்த கலியுக வள்ளல் அவர்.
புரட்சித்தலைவரை போன்ற தோற்றப்பொலிவும், வசீகரத்தன்மையும் உலகில் எந்த ஒரு தலைவருக்கும் அமைந்ததில்லை என்பது அடுத்த தனித்தன்மை. எம்.ஜி.ஆர். வருகிறார் என்றால், அவருடைய முகத்தை பார்ப்பதற்காக சாலையில் விடிய விடிய மக்கள் காத்து கிடந்தார்கள். விளம்பரம், வாகன வசதி போன்ற எதுவும் செய்து தராமலே தானாகவே எம்.ஜி.ஆரை காண்பதற்காக மீண்டும், மீண்டும் வந்து குவிந்தார்கள்.
தமிழகத்திலே அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடியது எம்.ஜி.ஆர். கூட்டங்களுக்கு மட்டும்தான். தி.மு.க.வில் கட்சி வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட சிறப்பு கட்டண கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசுகிறார் என்றால், டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அலைமோதினார்கள். தன்னெழுச்சியாக எம்.ஜி.ஆரை காண லட்சக்கணக்கில் கூடிய மக்களின் எழுச்சி, இதுவரை வேறு எந்த தலைவருக்காகவும் கூடவில்லை.
எம்.ஜி.ஆர். எங்கு சென்றாலும் அவருடைய காருக்கு பின்னே அன்பு மிகுதியால் ஓடிவரும் மக்கள் கூட்டத்தை பார்த்து, ‘இத்தனை மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், இவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணினார். அதனால்தான், தனி மனித ஒழுக்கத்தையும், கட்டுப்பாடுகளையும் தன் வாழ்க்கையில் கடைபிடித்து, அதையே திரைப்படங்களிலும் வெளிப்படுத்தி தலைவனுக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.
தன்னுடைய திரைப்படத்தின் வசனம், பாடல், காட்சியமைப்பு போன்ற எல்லாமே மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நன்மை தருவதாக, வழிகாட்டுவதாக அமைய வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியையும் தீர்மானித்தார். அதனால்தான் யார் பாடல் எழுதினாலும், யார் வசனம் எழுதினாலும், யார் கதை எழுதினாலும் அது எம்.ஜி.ஆருடையதாகவே மக்கள் பார்த்தனர்.
தன்னுடைய சினிமாவை பார்த்து யாரும் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, எந்த ஒரு தீய பழக்கமும் இல்லாத நற்பண்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். ஒரு நாயகனுக்காக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அமைத்து சினிமா தயாரிக்கப்பட்டது என்றால், உலகிலேயே அது எம்.ஜி.ஆர். ஒருவருக்காக மட்டும்தான்.
மீனவனாக நடிக்கிறார் என்றால், ‘தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்’ என்று வேதனையை கொட்டுவார். உழைப்பாளியாக நடிக்கிறார் என்றால் ‘உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்’ என்று ஒற்றுமைக்கு உரிமை குரல் கொடுப்பார். நல்ல மகனாக, நல்ல சகோதரனாக, நல்ல தலைவனாக, நல்ல அரசனாக வாழ்ந்து காட்டியதாலே, எம்.ஜி.ஆரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். வேறு எந்த தலைவரிடமும் இல்லாத எம்.ஜி.ஆரின் வசீகரம்தான் மக்களை காந்தம் போல் இழுத்தது. அவரை வாழ்நாள் முதல்-அமைச்சராகவும் மாற்றியது.
அரசியல் வரலாற்றில், 2 கட்சிகளை ஆட்சிப்பொறுப்பில் அமர வைத்த பெருமையும், திறமையும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு என்பது அவரது 3-வது தனித்தன்மை. சினிமாவில் பிரபலமாக இருந்த நேரத்தில்தான் அண்ணாவின் தலைமையை ஏற்று தி.மு.க.வில் இணைந்தார். சினிமா, நாடகங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் தி.மு.க.வின் வெற்றிக்கு உழைத்தார்.
நடிகன் நாடாள முடியுமா? என்று பலரும் கிண்டல் செய்த நேரத்தில், நாட்டை மட்டுமல்ல, மக்கள் மனதையும் ஆள முடியும் என்று நிரூபித்து காட்டினார். ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்று சினிமாவில் சொன்னதை நிஜமாகவே நிறைவேற்றி காட்டினார். ஏழைகளுக்காகவே ஏராளமான திட்டங்களை தீட்டிய காரணத்தாலே அவர், வாழும் வரை தோல்வி காணாத நிரந்தர முதல்-அமைச்சராக திகழ்ந்தார்.
இப்படி, 2 கட்சிகளை வெற்றி பெற வைத்த வரலாறு, எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த தலைவருக்கும் இல்லை. மக்கள் தலைவராக இருந்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். மறைவுக்கு தமிழகமே குலுங்கியது. கின்னஸ் சாதனையாக சுமார் 75 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் மட்டும் சுமார் 28 லட்சம் மக்கள் பங்கேற்றனர். ஏராளமான தொண்டர்கள் தற்கொலை செய்து, தங்கள் உயிரை மாய்த்து கொண்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் மனதிலும், தொண்டர்கள் உள்ளத்திலும் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’- என்று கேள்வி எழுப்பி, அந்த கேள்விக்கு அன்றும், இன்றும், என்றும் பதிலாக திகழ்பவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான். அதனால்தான் அவரை அவதார புருஷர் என்று சொல்கிறேன். இந்த உலகின் கடைசி மனிதன் வாழும் வரை புரட்சித்தலைவரின் புகழ் இருக்கும்.