கம்பளை, தெல்பிட்டிய பகுதியில் வெசாக் தானசாலை வரிசையில் நின்ற யுவதியின் கையடக்க தொலைபேசியினை திருடிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் ஹிரான் ஏக்கநாயக்க உத்தரவிட்டார்.
சனிக்கிழமை (06) இரவு இடம் பெற்ற மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
கம்பளை, துனுக்கே உல்ல பிரதேசத்திலிருந்து தனது மனைவியுடன் முச்சக்கர வண்டியில் தானசாலைக்கு வருகைதந்த சந்தேக நபர், யுவதியின் கைத்தொலைபேசியினை திருடி தனது முச்சக்கர வண்டியில் மறைத்து வைத்துள்ளார்
தனது தொலைபேசி காணாமல் போனமை குறித்து குறித்த யுவதி அங்கு காவலுக்கு நின்ற பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரித்துள்ளனர் இதன் போது சந்தேக நபர் தான் லொறி ஒன்றில் வந்ததாக பொய் கூறி தலைமறைவாகியுள்ளார்
இதையடுத்து பொலிஸார் இரகசியமாக சந்தேக நபரை கண்காணித்து வந்த நிலையில் சந்தேக நபர் இரகசியமாக முச்சக்கர வண்டியில் மனைவியுடன் தப்பிச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளதோடு திருடப்பட்ட தொலை
பேசியினை முச்சக்கர வண்டியினுள் இருந்து மீட்டுள்ளனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதவான் முன் நிலையில் நிறுத்திய பொழுதே மேற்கண்ட விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கம்பளை நிருபர்
