கம்பளையில் புழு வைத்து – அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை வைத்திருந்த உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு கம்பளை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில் கம்பளை வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள சபாரி என்ட் பேக்கரி என்ற உணவகத்துக்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கம்பளை நகரி மேற்படி உணவகம் சுகாதார பரிசோதகர்களால் சில நாட்களுக்கு முன்னர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது பழுதடைந்திருந்த 780 முட்டைகள் மீட்கப்பட்டன. அவற்றில் புழு வைத்திருந்தது.
கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் போன்ற உணவுகளுக்கு பயன்படுத்துவதற்கு இவை வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் உணவக உரிமையாளருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில், கம்பளை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பில் உணவக உரிமையாளருக்கு 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தக்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உணவகத்திலுள்ள குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னரே, சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்புக்கு பிறகு அதனை திறக்க முடியும்.
சுகாதார அதிகாரிகளால் மீட்கப்பட்ட முட்டைகள் அழிக்கப்பட்டன.
பிரதான கோழி பண்ணையொன்றில் இருந்து குறைந்த விலையில் பழுதடைந்த முட்டைகளைப் பெற்று, அவற்றை கம்பளையில் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டூரன்களுக்கு மேற்படி ஹோட்டல் உரிமையாளர் விற்பனை செய்து வந்துள்ளார் என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.