கண்டி மாவட்டத்தில் உடபளாத்த பிரதேச செலயகத்துக்கு உட்பட்ட கம்பளை நகரில் , கண்டி – நுவரெலியா பிரதான பாதையில் பாலத்தின் அருகில் காணப்படும் பஸ்தரிப்பிடத்தை சிலர் சூட்சுமமான முறையில் ஆக்கிரமித்துவருகின்றனர். இதனால் பயணிகளுக்கு பஸ்களுக்காக அப்பகுதியில் சுதந்திரமாக காத்திருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பஸ் தரிப்பிடத்தில் கொழும்பு, கண்டி, குருணாகலை, யாழ்ப்பானம் போன்ற இடங்களில் இருந்து வரும் பஸ்களும், கம்பளை, நாவலபிட்டிய ஹட்டன் ,நுவரெலியா ,பூண்டுலோயா , தலவாக்கலை, ண்டாரவளை, வெலிமடை, பதுளை, கதிர்காமம் போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன.
அத்துடன், கம்பளையில் இருந்து நுவரெலியா, பூண்டுலோயா புஸ்ஸல்லாவை, புப்புரஸ்ஸ , தொலுவ ஊடாக கண்டி , துனுக்கேஉல்ல , தொரகல, கலத்த போன்ற இடங்களுக்கும், கிராம புறங்களுக்கும் செல்லும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரச பஸ்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன.
இந்த பஸ்கள் வரும் வரைக்கும் காத்திருக்கும் பயணிகளுக்கு இந்த இடத்தில் எவ்வித வசதியும் இல்லை. இவர்கள் காத்திருப்பதற்கு ஆரம்ப காலங்களில் இருந்த இடமும் தற்போது கம்பளை நகர சபையின் கடை அமைப்பினால் இல்லாமல் போய் உள்ளது.
இதனால் மழைக்காலங்களிலும் ஏனைய காலங்களிலும் இந்த பஸ் தரிப்பிடத்தை பாவித்து வரும் பொது பிரயாணிகளும் பாடசாலை மாணவர்களும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். அதனால் முன்னர் இருந்தது போல் இந்த பஸ் தரிப்படத்தை சீர் செய்து தருமாறு பிரயாணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்