‘களுத்துறை பெருந்தோட்ட மக்களை மறந்த மலையகக் கட்சிகள்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும், அவர்களின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும், பாதுகாக்கவுமே தொழிற்சங்கங்கள் உருவாகின.

குறிப்பாக இது களுத்துறை மாவட்டத்துக்குப் பொருத்தமாகும். இதுவரை காலமும் இந்த மாவட்டத்தின் இங்கிரிய, மத்துகம ஆகிய இரு நகரங்களில் மட்டும் இ.தொ.காவின் தொழிற்சங்கக் காரியாலயங்கள் இயங்கி வருகின்றன. மத்துகம நகரில் காரியாலயம் இயங்கிவந்த போதிலும் அங்கு பணிபுரிந்து வந்த தொழிற்சங்க சட்டதிட்டங்கள், நுணுக்கங்கள் பற்றிய நல்ல அனுபவத்தைக் கொண்டிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதியொருவர் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸை விட்டு விலகிச்சென்றதால் இங்கிரிய மாவட்ட காரியாலயத்தில் பணியாற்றிவரும் தொழிற்சங்கப் பிரதிநிதியே மத்துகம மாவட்டக் காரியாலயத்துக்கும் பொறுப்பாக இருந்து வருகின்றார்.

தொழிற்சங்கக் காரியாலயங்கள் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில் ஒரு மந்தகதியை பார்க்கிறோம். சங்கங்கள் அடிக்கடி மூடப்பட்ட நிலையில் கிடப்பதையே காணமுடிகிறது. வாலிபர் சங்கம், மாதர் சங்கம், இளைஞர் அமைப்பு இவை இயங்குவதே கிடையாது. தோட்டக்கமிட்டித் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் பெயரளவில் மட்டுமே இருந்து வருகின்றனர்.

எனவே இ.தொ.கா அதன் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி மீள கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாய நிலையேற்பட்டுள்ளது. இ.தொ.காவின்  ஜீவன் தொண்டமான் விசேட கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு உள்ளது.

இனி அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் அவரும் சரி, காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் சரி இந்த மாவட்டம் குறித்து கவனம் செலுத்தி வந்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளதுடன் இது குறித்து ஆராய்ந்துபார்க்க வேண்டியுமுள்ளது.

2007இல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்தராஜபக்ஷவின் ஆட்சியில் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமான் மலையக இளைஞர்களை நவீன தொழில்நுட்ப உலகுக்கு அறிமுகம் செய்யும் ஒரு ஆரம்ப நடவடிக்கையாக மலையகத்தின் பல பகுதிகளிலும் 2007.11.05ல் பிரஜாசக்தி கணனிப் பயிற்சி நிலையங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, கலஹேன தோட்டத்தில் சுமார் 2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பயிற்சி நிலையமும் ஒன்றாகும்.

மேலும் ஒரு பயிற்சி இந்த மாவட்டத்தின் இங்கிரிய றைகம் தோட்டத்தில் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை எழுக்கப்பட்டு வருவதாக பிரஜாசக்தி நிலையத்தின் அப்போதைய இணைப்பாளராக இருந்த ரீ. நிசாந்தன் தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறான ஒரு நிலையம் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் 13 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டு இயங்கிவரும் ஒரேயொரு பயிற்சி நிலையமும் இதுவரையில் முன்னேற்றம் கண்டிராது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது என்பதே பலரினதும் அபிப்பிராயமாகும். பாதுகாப்பானதும் வசதியானதுமான ஒரு இடத்தில் இந்நிலையம் அமைபப் பெற்றிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டின் முற்பகுதியில் இதே பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற களுத்துறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 200 பேருக்கு அமைச்சினுௗடாக கோழிக்குஞ்சுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொண்டார்.

அதே ஆண்டு இறுதியில் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் இ.தொ.கா தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது பிரசார நடவடிக்கைகளில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனரே தவிர அதன் பின்னர் ஆறு வருடங்கள் கடந்த நிலையில் ஆறுமுகன் தொண்டமானோ அல்லது இ.தொ.காவின் முக்கியஸ்தர்களோ எவரேனும் இந்த மாவட்டத்தின் எந்தவொரு நிகழ்விலும் கலந்துகொண்டதில்லை. மக்களின் குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்து கண்டறியவோ கேட்டறியவோ எவருமே வந்ததில்லை.

நாட்டில் அடுத்து நடைபெறவிருப்பது மாகாணசபைத் தேர்தலாகும். மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் நிச்சயமாக இ.தொ.கா களுத்துறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கும் என நம்பப்படுகிறது. எனவே இப்போதிருந்தே இ.தொ.கா அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி அதன் வேலைத் திட்டங்களை விஸ்தரிக்க வேண்டும்.

அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பலராலும் ஏமாற்றப்பட்டு புறக்கணிக்கப்பட்டு இனி யாரையும் நம்புவதற்கில்லை என விரக்தியுற்ற நிலையில் வாழ்ந்துவரும் களுத்துறை மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒரு விடிவை ஏற்படுத்தும் பொருட்டு ஜீவன் தொண்டமான் இந்த மாவட்டம் குறித்து விசேட கவனம் செலுத்த முன்வரவேண்டும். தமது தந்தை ஆறுமுகன் தொண்டமானால் ஆகாத காரியங்களை இவர் சாதித்து சாதனை படைக்க வேண்டும்.

தந்தையின் திடீர் மறைவையடுத்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள இளைஞரான ஜீவன் தொண்டமானுக்கு எண்ணற்ற பொறுப்புக்களும் கடமைகளும் தினமும் குவிந்த வண்ணமாகவே இருக்கின்றன. இவர் என்ன செய்யப் போகிறார்? சாதிப்பாரா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இவர் சாதித்துக் காட்ட வேண்டும். காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி பக்கபலமாக இருந்து அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டும். அவரது திட்டங்களும், எண்ணங்களும் நிறைவேற வெற்றிபெற அவருக்கு உறுதுணையாக இருந்து பாடுபட வேண்டும்.

ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு மட்டும் பிரதிநிதியல்ல. ஒட்டுமொத்த மலையக மக்களுக்குமான பிரதிநிதி என்பதை மனதிற்கொண்டு செயற்பட வேண்டும்.

2017ம் ஆண்டு மே மாதத்தில் நாட்டில் ஏற்பட்ட மோசமான இயற்கை அனர்த்தத்தினால் களுத்துறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருந்த மக்கள் நலன்கருதி ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? முறையாகப் புூர்த்தி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அப்போதைய நல்லாட்சியில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஆரம்பிக்கப்பட்ட சில வீட்டுத்திட்டங்கள் இன்னும் புூர்த்தி செய்யப்படவில்லை. மக்களிடம் கையளிக்கப்பட்ட இரண்டொரு வீட்டுத்திட்டங்களில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் குடிநீர் வசதி கிடையாது என பயனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வோகன் தோட்டம் கீழ்ப்பிரிவு, கொபவெல ஆகிய தோட்டங்களில் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 55 குடும்பங்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் இன்னும் பூர்த்தியடையாது கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. அரப்பொலகந்த, லிஸ்க்லேன் பிரிவில் கையளிக்கப்பட்ட 29 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தில் முறையான குடிநீர் வசதி கிடையாது.

குறைபாடுகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்படும்போது பத்திரிகைகளைப் பார்த்துவிட்டு எங்களுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது என அன்று ட்ரஸ்ட் நிறுவனத்தில் பொறுப்புவாய்ந்த பதவியிலிருந்த அதிகாரியொருவர் கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

முன்னைய ஆட்சியிலும் சரி, நல்லாட்சியிலும் சரி தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கொன்கிறீட் பாதை, குடிநீர், விளையாட்டு மைதானம், மலசலகூடம், சிறுவர் அபிவிருத்தி நிலையம், கூரைத்தகடுகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பல புகார்கள் உள்ளன. எந்த ஆட்சியானாலும் என்ன நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் களுத்துறை மாவட்ட மக்களின் நிலையை கவனத்திற்கொண்டு விசேட கவனம் செலுத்த முன்வரவேண்டியது அவசியம்.

இங்கிரிய மூர்த்தி
Paid Ad