பலாங்கொடை பிரதேச செயலகத்தின் மூலம் காணி பெற்று தருவதாக பெண் ஒருவருக்கு போலியான விண்ணப்பப்படிவத்தை கொடுத்து அவளின் நகைகளை அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று பலாங்கொடை நகரில் நடைபெற்றுள்ளது.
பலாங்கொடையில் இப் பெண்ணிடம் காணியில்லாத வறிய குடும்பங்களுக்கு பிரதேச செயலகத்தின் மூலம் காணி பெற்று தருவதாகவும் அதற்காக தம் வசம் விண்ணப்பப்படிவம் இருப்பதாக இருவர் கூறியுள்ளனர்.
அதனையடுத்து அந்தப் பெண் தமக்கும் விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்குமாறு வேண்டியுள்ளார்.
அந்த நபர் விண்ணப்பப்படிவத்தை பெண்ணிடம் கொடுத்து அதனை போட்டோ பிரதி எடுத்து வருமாறும் பிரதி எடுக்க செல்லும்போது தங்க ஆபரணங்களை அணிந்து செல்ல வேண்டாம் எனவும் வறுமை நிலையை காட்டுமாறு வேண்டியுள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண் இதனை நம்பி தங்க நகைகளை கழற்றி மற்ற பெண்ணிடம் கையளித்து போட்டோ பிரதி எடுக்க சென்றுள்ளார்.
விண்ணப்பப்படிவத்தை போட்டோ பிரதி எடுத்து வந்து பார்க்கும் பொழுது அந்த நபரும் பெண்ணும் தங்க நகைகளுடன் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. உடனடியாக இது சம்பந்தமாக அந்த பெண் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
