முல்லைத்தீவு மாவட்டம், குருந்தூர்மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட இரண்டு விவசாயிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இரண்டு விவசாயிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் கட்டளையாக்கியுள்ளது.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் தனது கட்டளையில், “மேற்படி சந்தேகநபர்கள் மீது வழக்கைத் தொடர்ந்து நடத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை. குறித்த பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுநர் தரப்பே ஏற்றுக்கொண்டுள்ளது.” – என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் இன்று முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தின் பத்துக்கும் அதிகமான சட்டத்தரணிகள் சந்தேகநபர்கள் சார்பாகத் தோன்றி வாதிட்டிருந்தார்கள்.
