எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு, யாத்திரை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (18) நல்லத்தண்ணியில் நடைபெற்றது.
சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான பெங்கமுவே தம்மதின்ன தேரர் தலைமையில், நல்லத்தண்ணி சுகாதார வைத்திய அதிகாரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
யாத்திரை காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், போக்குவரத்து, தங்குமிடம், சுகாதாரம், மின்சாரம் மற்றும் கழிவகற்றல் வசதிகளை முறையாக ஏற்பாடு செய்வது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
நல்லதண்ணி முதல் சிவனடி பாத மலை உச்சி வரை பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், யாத்திரிகர்களிடம் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சிவனடி பாத மலையின் சுற்றுச்சூழலை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினரிடம் அதனை கையளிக்கும் பொறுப்புடன் யாத்திரிகர்கள் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

