ரஷ்ய ஜனாதிபதி புடின், இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை சீனா செல்கின்றார். அவரின் பீஜிங் பயணம் குறித்து அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
உக்ரைன்- ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு ஆரம்பமானது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் செயல்படுகின்றன. இந்த நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் அந்த நாடுகள் மீது பொருளாதார தடை விதித்தது.
ஆரம்பம் முதலே இந்த போரில் நடுநிலை வகிப்பதாக சீனா கூறியது.அதன்படி ரஷியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவற்றை சீனா செய்யவில்லை. எனினும் ஐரோப்பிய நாடுகள் விதித்து வந்த பொருளாதார தடைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதேபோல் உக்ரைனுக்கு எதிராக போர் முயற்சிக்கு பயன்படும் எந்திரங்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. இதன் மூலம் மறைமுகமாக ரஷியாவுக்கு சீனா உதவுகின்றது.
இந்தநிலையில் சீன ஜனாதிபதி ஜின்பிங் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்தார். அதன் பேரில் ஜனாதிபதி புடின நாளை வியாழக்கிழமை சீனாவுக்கு செல்கிறார்.
2 நாட்கள் அங்கு தங்கும் அவர் அதிபர் ஜின்பிங் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.
5-வது முறையாக பதவி ஏற்ற பிறகு ஜனாதிபதி புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு, சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.