செம்மணி புதைகுழியென்பது ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும். அப்பாவி மக்கள் கொன்று புதைக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய மனித உரிமை மீறலாகும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ இராணுவம் – அரச பயங்கரவாதம் – பேரினவாத அடக்குமுறை – ஏதேச்சாதிகாரம் , போர் வெற்றி என்பவற்றால் நடந்ததுதான் செம்மணி புதைகுதி. அங்கே இருப்பது நம்மவர்களின் எலும்புக்கூடுகள்.
அப்பாவி மக்களை கொலை செய்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற செயல்களை ஏற்கமுடியாதவை. இவைதான் மனித உரிமை மீறல். இதனை அமைச்சர் சந்திரசேகரன் மறந்துவிடக்கூடாது.
இனப்பிரச்சினை காரணமாகவே போர் நடந்தது. அதிகாரப்பகிர்வுக்காக தந்தை செல்வா முதல் பிரபாகரன்வரை போராட்டம் நடைபெற்றது. தற்போதும் அப்போராட்டம் இழுபட்டு செல்கின்றது.
யுத்தம் முடிந்தாலும் – யுத்தம் ஏற்படுவதற்கு வழிசமைத்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, அதிகாரப்பகிர்வின் அவசியத்துவத்தை அநுர, ரில்வின் சில்வாவிடம் சந்திரசேகரன் எடுத்துரைக்க வேண்டும்.” – என்றார் மனோ கணேசன்.