ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கும், சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, “22-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதற்கு முகம் கொடுக்கவே அரசாங்கம் ஆயத்தமாகி வருகிறது என்றும், இதற்காகவே ஆளுங்கட்சியால் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறதே?” என அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
“ஆளுங்கட்சியால் நடத்தப்படும் கூட்டங்களுக்கும், 22-ஆவது திருத்தம் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றமே இறுதித் தீர்ப்பை வழங்கும். இது குறித்து ஜி.எல். பீரிஸோ அல்லது வேறு நபர்களோ முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்க முடியாது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் அரசாங்கம் எதற்காக அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராக வேண்டும்?
அதேவேளை, அரசாங்கத்தின் இரு ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் கூட்டங்களுக்கான நிதிச் செலவினங்களை தேசிய மக்கள் சக்தியே முழுமையாகப் பொறுப்பேற்கும்” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.










