தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

ஹட்டன் செனன் தோட்டத்தில் கே.எம். பிரிவில் 03.03.2025 இரவு 07.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து ஹட்டன் பொலிஸார், ஹட்டன் நகரசபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3   மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும், 20 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 20 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேரை தற்காலிகமாக  மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பரவிய தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தவர்களில் 5 நபர்கள் சிறு சிறு தீ காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார், ஹட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles