தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 18 ஆம் திகதி முதல் கற்பித்தல் ஆரம்பம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, நாளை   (15) கல்வியியல் கல்லூரிகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாடசாலைகளில் உயர்தர வகுப்பிற்கான தொழில்நுட்பத்துறை பாடத்தை தெரிவு செய்துள்ள மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்குரிய புதிய பீடமொன்றை துரிதமாக ஆரம்பிக்குமாறும் கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

COVID-19 சிகிச்சை நிலையங்களாக கல்வியியல் கல்லூரிகள் பயன்படுத்தப்பட்டமையால், அவற்றில் கற்பித்தல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது 7,784 பேர் ஆசிரியர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், 4,547 பேர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்குரிய தகுதியை பூர்த்தி செய்துள்ளனர்.

தகுதி பெற்றுள்ளவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Articles

Latest Articles