46,000 சிறுவர்கள் வன்முறைக்கு சிறார்கள் வன்முறைக்கு இலக்காகியுள்ளனர்: விரைவில் நீதி அவசியம்

நாட்டில் சிறுவர் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளான 46,000 பேர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நீதி கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

தற்போதைய சூழ்நிலையில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நமது நாட்டில் சிறுவர் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளான 46,000 பேர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நீதி கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் அநீதிகளுக்கு ஆளான சிறுவர்களுக்கு அவர்களது சிறுவர் பருவத்திலேயே அதற்குரிய நீதி கிடைக்கவில்லை என பல அவதானிகள் சுட்டிக்காட்டுவதால், இந்த 46,000 பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகவே, இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதைத் தாமதிக்காமல், துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் இன்னல்களுக்கு ஆளான சிறுவர்களுக்காக உரிய நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புப் பற்றி உயர்வாகப் பேசியதால், அந்தப் பேச்சுக்களைச் செயலில் காட்ட வேண்டும்.

2019 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல் கொள்கை ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டளவில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் அதனை 2029 ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றது.

2024 ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பெற்று சிறுவர் தலைமுறையைப் பாதுகாப்பதற்காகக் கிடைத்த வாய்ப்பை, 2029 இல் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் எவ்வாறு தீர்மானிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சிறுவர் தலைமுறைக்கு இழைக்கப்படும் பாரதூரமான அநீதியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் தற்போது நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் கீழ் 4,000 வழக்குகள் காணப்படுவதனால், அவற்றை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தாமதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல் கொள்கையை இந்த வருடத்திலேயே நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்க்கட்சி பூரண ஆதரவை தரும். 46,000 முறைப்பாடுகளை விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுங்கள். அதற்காகத் தேவையான விசேட பிரிவுகள், ஏற்பாடுகள் மற்றும் விசேட பணிக்குழுவொன்று ஜனாதிபதியின் தலைமையில் இயங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் தெளிவான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என நான் இங்கு யோசனை முன்வைக்கிறேன்.

46,000 பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு எனதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும் முழுமையான ஆதரவைத் தருவோம். இதனை ஒரு அரசியல் பிரச்சினையாக்காமல், சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles