தொழிலாளருக்கு எதிரான சகல வன்முறைகளையும் நிறுத்துமாறு இலங்கை செங்கொடி சங்க தலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலிய புரவுன்சீக் தோட்டப் பிரிவு முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற தொழிலாளர் தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு, உழைப்புக்கான ஊதியம், வேலைத்தள பாதுகாப்பு, கர்ப்பிணி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, போன்ற பல்வேறு விடயங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. வறுமை, போசாக்கின்மை சிறுவர் கல்வி இடைவிலகல், சிறுவர் உழைப்பு போன்றன அதிகரித்துவருகின்றன. இதனை எதிர்த்து செயற்படும் தொழிலாளர்களின் போராட்டங்களும் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு வருகின்றது.
200 ஆண்டுகளாக இந்த நாட்டுக்காக பாரிய பொருளாதாரத்தை உழைத்துக்கொடுத்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிரந்தர தொழில், தற்போது தற்காலிக தொழிலாக மாற்றம் அடைந்து வருகின்றது. அதேபோல் ஆடை தொழிற்சாலை தொழிலாளர்களை கம்பெனிகள் அடிமைகளாக நடத்தும் விதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே இச்செயற்பாடுகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சகல தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் பேதமின்றி ஒன்று திரள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
