நல்லாட்சியை விளாசித் தள்ளிய மஹிந்த! காரணங்களையும் பட்டியலிட்டார்

மத்தள விமான நிலையத்தை நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம் செய்தது ஒன்றும் இல்லை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஆசியாவின் விமான சேவைக்கான கேந்திரநிலையமாக எமது விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாம் 2010ஆம் ஆண்டு தீர்மானித்தோம். நிகழ்காலத்துக்கு ஏற்ற வகையில் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவே நாம் விரும்பினோம். அதேபோன்று மேலும் 20 ஆண்டுகளுக்கு பின்னரான எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த அபிவிருத்தி திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷுவா அபே தலைமையில் 2014ஆம் ஆண்டிலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அபிவிருத்தி திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு முதலீட்டாளர்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே 2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தை இரண்டு கட்டங்களில் நிறைவுசெய்வதற்கு அப்போது திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இத்திட்டத்தை திட்டமிட்டபடி முன்னெடுத்து செல்லவில்லை. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்று நாம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் இக்கட்டத்தின் பணிகளை ஆரம்பிப்பதனையும் நல்லாட்சி அரசாங்கம் தாமதப்படுத்தியது. இக்கட்டிடத்தின் கூரையின் வடிவமைப்பை மாற்றுவதற்கான தேவை அவர்களுக்கு இருந்தது. இந்த கூரை வடிவமைப்பை மாற்றுவதற்காக மாத்திரம் நல்லாட்சி அரசாங்கம் 661 மில்லியன் ரூபாயை செலவிட்டது. அவ்வாறு திட்டத்தை மாற்ற முயற்சித்தமையாலேயே இரண்டாம் கட்டத்தின் பணிகளை ஆரம்பிக்க தாமதிக்கப்பட்டது.

இன்று முதல் விமான நிலையத்தில் 48 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக ஒரு ஆண்டிற்கு 6 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் 2023ஆம் ஆண்டளவில் 15 மில்லியன் வரை அதிகரிக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது விடுதலை புலி பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கும். அப்போது விமான நிலையத்தில் பணியாற்றியவர்கள் அத்தாக்குதலின் கொடூரத்தை அனுபவித்தனர். அந்த அவசர நிலையின் போது இலங்கைக்கு வந்த விமானங்களை மாற்றி அனுப்புவதற்கு வேறு விமான நிலையமொன்று எமக்கு இருக்கவில்லை.

அதனால் அண்மித்த நாடுகளுக்கு அவ்விமானங்களை அனுப்புவதற்கு எமக்கு நேரிட்டது. அப்போதே மற்றுமொரு விமான நிலையத்தின் தேவை எமக்கு உணரப்பட்டது. அதற்கமையவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு விமான நிலையத்தின் தேவை குறித்து எமது அரசாங்கம் கவனம் செலுத்தியது. அதற்கமைய நாம் மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தோம். ” – என்றார்.

Related Articles

Latest Articles