வெனிசுலாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்பு மறுபுறம் என வெனிசுலா நிலைகுலைந்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
வெனிசுலாவில் 1900 ஆம் ஆண்டிற்குப் பிறகு அங்கு பதிவான மிக வலுவான நிலநடுக்கமாகும்.
பல ஆண்டுகால பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே பலவீனமடைந்திருந்த ஒரு நாட்டை இந்தத் பேரிடர் தாக்கியுள்ளது. இதனால் நாட்டின் உள்கட்டமைப்புகள் சிதிலமடைந்துள்ளதோடு, தலைநகரையும் அதைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளையும் தொடர் அதிர்வுகள் உலுக்கி வருவதால் மீட்புப் பணிகளும் சிக்கலாகியுள்ளன.
வியாழக்கிழமை பிற்பகுதியில் பேசிய சுகாதார அமைச்சர் கார்லோஸ் ஆல்வராடோ, இதுவரை சுமார் 235 உடல்கள் மருத்துவ மையங்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனினும், ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை அவர் முழுமையாகக் குறிப்பிடவில்லை.
250 கட்டிடங்கள் சேதமடைந்து அல்லது இடிந்து போயுள்ளதாகவும், இந்த கட்டிடங்களில் குறைந்தது எட்டு மருத்துவமனைகள், வெனிசுலா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் மற்றும் பிரான்ஸ் தூதரகம் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லா குவைரா மாநிலத்தில் சுமார் 70,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ கூறினார்.
கராகஸை ஒட்டியுள்ள கடலோர மாநிலமும், நாட்டின் முக்கிய விமான நிலையத்தைக் கொண்டுள்ள இடமுமான லா குவைரா, இந்த நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.
“இது ஒரு பேரிடர் மண்டலமாக மாறியுள்ளது,” என்று தற்காலிக அதிபர் ரோட்ரிக்ஸ் கூறினார். மேலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், கனரக உபகரணங்களைக் கொண்டு வரவும் அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்ததை அடுத்து கராகஸ் விமான நிலையம் மூடப்பட்டது.
அரசு விடுமுறை நாளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பல வெனிசுலா மக்கள் வீடுகளிலேயே இருந்தனர். கராகஸ் மற்றும் அருகிலுள்ள கடலோரக் குடியிருப்புகளில் கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
46,000-க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என தகவல்களைத் திரட்டும் இணையதளம் பட்டியலிட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கணிப்பு மாதிரிகள், பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயரக்கூடும் என்றும், அது 10,000 ஐத் தாண்டுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களால் பகிரப்பட்ட ஒரு இணையதளத்தில், வியாழக்கிழமை இரவு 7 மணி (2300 GMT) நிலவரப்படி 46,000-க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனப் பட்டியலிடப்பட்டிருந்தது.
அரசியல் ஒடுக்குமுறை, பொருளாதார வீழ்ச்சி மற்றும் தூதரக அழுத்தங்களுக்கு மத்தியில் பல தசாப்தங்களாக சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெனிசுலாவுக்கு, அதை எதிர்த்து வந்த நாடுகள் உட்பட உலக நாடுகள் பலவும் தங்களது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன.
சர்வதேச மீட்புக் குழுக்கள் விரைவில் வரவுள்ளதாகக் கூறிய ரோட்ரிக்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வொஷிங்டன் நிர்வாகம் வெனிசுலா மீதான தடைகளைத் தளர்த்தி, நிலநடுக்க நிவாரணம் தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்கா “உதவி செய்யத் தயாராகவும், விருப்பத்துடனும் உள்ளது” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், வொஷிங்டன் மீட்புக் குழுக்களை அனுப்பும் என்றும், பென்டகன் தளவாட உதவிகளை வழங்கி, சேதமடைந்த கராகஸ் விமான நிலையத்தை சீரமைக்க உதவும் என்றும் தெரிவித்தார்.
வெனிசுலாவிற்கான ஐ.நா.வின் மனித உரிமைகள் தூதுக்குழு, சமூக ஊடகங்கள் மீதான சில கட்டுப்பாடுகளை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதுடன், தகவல் தொடர்பு என்பது இப்போது “வாழ்வா சாவா போராட்டம்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் (Starlink), பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள புதிய மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 25 வரை இலவச சேவையை வழங்குவதாகவும், தகவல் தொடர்பை மீட்டெடுக்க உதவும் வகையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டெர்மினல்களை அனுப்ப வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் எண்ணெய் துறையில், தங்களது செயல்பாடுகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், எண்ணெய் உள்கட்டமைப்புகள் பெரும்பாலும் தப்பியுள்ளதாகவும் வெளிநாட்டு ஆற்றல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.










