அமைச்சு பதவிக்காக அழுத்தங்களை பிரயோகிக்கும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச விசுவாசிகள் அரசில் இருந்து வெளியேறினாலும் இந்த ஆட்சி கவிழாது. எனவே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய தேவை எழாது – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா தெரிவித்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட நிமல் லான்சா, தற்போது நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றார்.
இது தொடர்பில் நிமல் லான்சா கூறியவை வருமாறு
” ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக ஆளுங்கட்சியினரை சந்தித்தபோது, நாடாளுமன்றம் கலைக்கப்படுமா என மொட்டு கட்சியினர் ஜனாதிபதியிடம் வினவினர். இதன்போது அவ்வாறு கலைக்கப்படமாட்டாது, எனினும், நீங்கள் கூறும்வேளை, அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி பதிலளித்தார்.
எனவே, அமைச்சு பதவி பிரச்சினையை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய தேவை இல்லை. நாமல் ராஜபக்ச குழுவுக்கு மொட்டு கட்சியில் தற்போது 25 எம்.பிக்களின் ஆதரவுகூட இல்லை.
ராஜபக்ச விசுவாசிகள் அரசில் இருந்து வெளியேறினால் பிரச்சினை இல்லை. அவர்கள் வெளியேறினால் எதிரணி எம்.பிக்கள் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.
