2 ஆவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது இலங்கை அணி.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகித்து வந்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 45.1 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியில் அபாரமாக பந்துவீசி வாண்டர்சே , தீக்சன ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 46 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 210 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.