வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் ஆலயத்தின் தலைவர் ரவி சிவகுமார், முதன்மை சிவாச்சாரியார், பொருளாளர், செயலாளர் மற்றும் ஆலய நிர்வாக சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகப் பெருவிழாவின் சிறப்பம்சங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ஹேக்கித்தை பகுதியில் இந்து ஆலயம் இல்லாத ஒரு காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆலயம், இப்பகுதி மக்களின் ஆன்மீகத் தாயாக விளங்குவதாகவும், ஆகம விதிகளின்படி ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக, ஆலய வரலாற்றில் நாம் காணும் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் இதுவாகும் என்றும் ஆலயத் தலைவர் ரவி சிவகுமார் தெரிவித்தார்.
இப்பகுதியில் வாழும் பல்வேறு இன, மத மக்களிடையே இந்த கும்பாபிஷேகம் பெரும் எதிர்பார்ப்பையும், ஆன்மீக ஆவலையும் ஏற்படுத்தியுள்ளதோடு, இன-மத நல்லிணக்கத்திற்கு இந்த ஆலயம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இம்முறை கும்பாபிஷேகம் பெருமளவிலான பொருட்செலவில், கொழும்பு மாகாணத்திலேயே மிக விஸ்தாரமான முறையில், சுமார் 3600 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் யாகசாலை மேடையில் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக கிரியைகளுக்காக 17 பிரதான குண்டங்கள், 16 உப குண்டங்கள் மற்றும் விநாயகர் வழிபாட்டிற்கான 2 குண்டங்கள் என மொத்தம் 35 மகா குண்டங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன. இலங்கையின் பிரபல சிவாச்சாரியார்களுடன், இந்தியாவிலிருந்தும் வருகை தரும் ஆன்மீகப் பெரியார்கள், சிவாச்சாரியார்கள் என 56க்கும் மேற்பட்ட குருமார்கள் இந்தத் திருக்குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்தவுள்ளதோடு, சூரியன் முதல் சந்திரன் வரை 24 மூர்த்தங்களுக்கான தெய்வத் திருவுருவங்கள் யாகசாலையில் அமைக்கப்பட்டு, தொடர்ந்து 4 நாட்கள் யாக பூஜைகளும் நடத்தப்படவுள்ளன. கும்பாபிஷேகத்திற்கான புண்ணிய தீர்த்தம் களனி கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு, பேலியகொட பூபால விநாயாகர் ஆலயத்திலிருந்து ஜூன் 19ஆம் தேதி தீர்த்த யாத்திரையாக எடுத்து வரப்படவுள்ளது.
இந்த தீர்த்த யாத்திரையின் போது அலங்கரிக்கப்பட்ட யானை மீது தீர்த்தம் வைக்கப்பட்டு, செண்டை மேள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ பவனியாக ஆலயத்தை வந்தடையும்.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரண்டரை நாட்கள் பக்தர்களுக்காக விசேட எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறும். 24 மூர்த்தங்களுக்கும் எண்ணெய்க்காப்பு சாத்துவதற்கு பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி வந்து செல்ல விரிவான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவில் சுமார் ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் வசதிக்காகப் பல்வேறு விசேட உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் வாகனங்களை நெரிசலின்றி நிறுத்துவதற்காக ஆலயத்திற்கு அண்மையிலுள்ள ‘சகுரா மைதானத்தில்’ விசேட வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து முதியவர்கள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி ஆலயத்தை வந்தடைய குறுந்தூர பேருந்து (‘ஷட்டில் பஸ்’) சேவைகளும் இலவசமாக இயக்கப்படவுள்ளன.
யாகசாலை நிகழ்வுகள் மற்றும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் இருந்த இடத்திலிருந்தே நேரடியாகக் கண்டுகளிக்க ஆலய வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல்களும், அகன்ற எல்.ஈ.டி திரைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் தடையற்ற குடிநீர் வசதி மற்றும் மாபெரும் அன்னதானப் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் அவசர மருத்துவத் தேவைகளைக் கவனிப்பதற்காக விசேட முதலுதவிப் பிரிவு மற்றும் மருத்துவக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகப் பணிகள் கடந்த ஒன்றரை வருடங்களாக மிகத் துல்லியமாக, கலைநயமிக்க கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் மற்றும் வண்ணத் தீட்டுகளுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாபெரும் திருப்பணிகளுக்குப் பல கொடையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பக்தர்கள் நிதியுதவிகளை வழங்கியுள்ள நிலையில், இன்னமும் நிதி மற்றும் பொருள் உதவிகள் தேவைப்படுவதால், ஆன்மீகத் தொண்டாற்ற விரும்பும் பக்தர்கள் தங்களின் பேராதரவை வழங்கலாம் என நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 3ஆவது மகா கும்பாபிஷேகப் பெருவிழாவிலும், எண்ணெய்க்காப்பு நிகழ்விலும் நாட்டின் நாலாதிசைகளிலிருந்தும் அனைத்து பக்தர்களையும் வருகை தந்து, எம்பெருமானின் அருள் பெற்றுச் செல்லுமாறு ஆலய தர்மகர்த்தா சபையினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.










