நுவரெலியா, மாகஸ்தோட்ட பகுதியில் கடந்த 10ஆம் திகதி சுற்றுலா விடுதியொன்றில் (கபானா) 27 வயதுடைய பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் அவரது காதலனை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர் கடந்த 12ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் கைவிலங்குடன் சுற்றித்திரிந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்று (13) அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய நீதிபதி, சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்த தகவலின்படி, சந்தேகநபர் தேரிப்பஹா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர்பெண்ணைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னதாக தேரிப்பஹா பொலிஸ் பிரிவில் சரணடைந்த பின்னர், பொலிஸ் காவலில் இருந்தபோது கைவிலங்குடன் தப்பிச் சென்ற தேடப்பட்டு வந்த நபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் மதுபோதையில் கைவிலங்குடன் சுற்றித்திரிந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நஞ்சுப் போத்தல் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
