கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்த போதிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாகத் தொடர்ந்து அதிகாரத்தில் உள்ளது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை எதிர்க்கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வரை இந்த நிலைமை தொடரும். புதிய கூட்டணியை அமைப்பதில் எதிர்க்கட்சிகள் சிரமங்களை எதிர்கொள்வதால், இந்தச் செயற்பாட்டுக்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் ரீதியாகப் பலவீனமடைந்துள்ள நெதன்யாகு, அமெரிக்கா, தனது சொந்த இராணுவத் தரப்பு மற்றும் அவருக்குப் பதிலாகப் பிரதமர் பதவியை ஏற்க முயற்சிக்கும் அரசியல்வாதிகள் ஆகியோரின் ஆதரவு குறைந்துள்ள நிலையிலும், ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நெதன்யாகுவின் இடைக்கால அரசாங்கத்துக்கு இஸ்ரேலை மீண்டும் போருக்குள் கொண்டுசெல்லும் அதிகாரம் உள்ளதா? அத்தகைய முடிவுக்கு உள்நாட்டில் எத்தகைய எதிர்வினைகள் ஏற்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இடைக்கால அரசாங்கத்துக்கு என்ன இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்?
சட்டபூர்வமாகப் பார்க்கும்போது, இஸ்ரேலின் இடைக்கால அரசாங்கத்துக்கு நிரந்தர அரசாங்கத்துக்கு உள்ள அதே அதிகாரங்கள் உள்ளன.
அந்நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் 30ஆவது பிரிவின்படி, புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை இடைக்கால அரசாங்கம் தனது வழமையான கடமைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.
எனினும், அவசரத் தேவைகள் இல்லாத பட்சத்தில், பதவியிலிருந்து வெளியேறும் அரசாங்கம் மாற்ற முடியாத அல்லது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கொள்கை முடிவுகளைத் தவிர்க்க வேண்டும் என இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இது ‘கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டிய கடமை’ என அழைக்கப்படுகிறது.
இருப்பினும், இடைக்கால அரசாங்கத்தின் அனுமதியுடன் நெதன்யாகுவால் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். இதனை அவசரமானதும் தேசிய நலனுக்கானதுமான நடவடிக்கை என அவர் நியாயப்படுத்தலாம் என்று லண்டனிலுள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியர் நெவ் கோர்டன் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
டெல் அவிவைத் தளமாகக் கொண்ட டாக்லித் நிறுவனத்தின் ஆய்வாளர் ஓர் ஆஷரும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்கள் பொதுவாக இடைக்கால அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் மிகத் தெளிவான விதிவிலக்காகக் கருதப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
போர் தொடங்குவது தொடர்பான முடிவுகளில் இஸ்ரேலின் உச்ச நீதிமன்றம் வரலாற்று ரீதியாகத் தலையிடுவதைத் தவிர்த்து வந்துள்ளது. மேலும், புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கும் அதன் குழுக்கள் அமைக்கப்படுவதற்கும் இடையிலான காலப்பகுதியில் நாடாளுமன்றக் கண்காணிப்பு மிகவும் பலவீனமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுக்கு எதிராகப் போர் தொடுப்பது உட்பட, இஸ்ரேலைப் போருக்குள் கொண்டுசெல்லும் சட்ட அதிகாரம் இடைக்காலப் பிரதமருக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இடைக்கால அரசாங்கத்தின் நிலைமை நெதன்யாகுவின் முடிவுகளுக்கான அரசியல் பொறுப்பை அதிகரிப்பதாக இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் எஹாப் ஜபரீன் தெரிவித்துள்ளார்.
தனது அரசாங்கத்தின் பதவிக்காலத்தையும் தாண்டி நீடிக்கக்கூடிய ஒரு முடிவின் விளைவுகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நெதன்யாகு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிக்க நெதன்யாகு முயற்சிக்கிறாரா?
கடந்த புதன்கிழமை, நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், ஈரான் மீதான தாக்குதலுக்கான இராணுவத் தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துமாறு இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பாதுகாப்பு அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகள், போரைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுக்க வழிவகுக்கலாம் என அந்நாட்டின் அரச தொலைக்காட்சியான KAN தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிராகப் புதிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நெதன்யாகு தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு தலைவர்களுக்கும் இடையிலான குறைந்தது ஒரு உரையாடல் கடும் வாக்குவாதமாக மாறியதாகவும் இஸ்ரேலின் Ynet செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், புதிய மோதலுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் தயாராக இருக்குமாறு அமெரிக்கா இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக KAN செய்தி வெளியிட்டது.
எனினும், இந்தச் செய்திகளை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM மறுத்துள்ளது. அவை வெறும் ஊகங்கள் மட்டுமே என அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், ஈரான் மீது உடனடியாகத் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேலிய இராணுவ உயர்மட்டம் இருப்பதாக Channel 13 தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடு புதன்கிழமை நடைபெற்ற விளக்கக் கூட்டத்தின்போது நெதன்யாகுவுக்கும், அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கும் எடுத்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
முக்கியமான அவசியம் இல்லாத பட்சத்தில் நெதன்யாகு எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த இஸ்ரேல் பெய்டெய்னு கட்சியின் தலைவர் அவிக்டோர் லீபர்மேன், நாடாளுமன்றக் கண்காணிப்பும் அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளின் முழுமையான இணக்கப்பாடும் இன்றி, நாட்டைப் போருக்குள் இட்டுச்செல்லக்கூடிய முடிவுகளை இடைக்கால அரசாங்கம் எடுக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டும் புதன்கிழமை நெதன்யாகுவுக்கு எழுதிய கடிதத்தில் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
உடனடியானதும் நேரடியானதுமான அச்சுறுத்தல் இல்லாத நிலையில் இஸ்ரேலியப் படைகளைப் போரில் ஈடுபடுத்துவது, அந்நாட்டின் ஜனநாயகத்துக்கும் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் போர் ஆரம்பித்தால் இஸ்ரேலில் என்ன நடக்கும்?
ஈரானுக்கு எதிராக மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டால் இஸ்ரேலிய அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான பிளவுகள் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நெதன்யாகுவுக்கும் அவரது கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களித்தவர்கள் புதிய இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்கலாம்.
ஆனால், மாற்றத்துக்கான கூட்டணி என அழைக்கப்படும் அணிக்கு ஆதரவளித்த பெரும்பாலானோர், தனது அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் தேர்தல் வெற்றியைத் தடுக்கவும் நெதன்யாகு போரைப் பயன்படுத்துவதாகக் கருதி அதிருப்தியடையலாம் எனப் பேராசிரியர் நெவ் கோர்டன் தெரிவித்துள்ளார்.
எனினும், மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், நெதன்யாகுவுக்கு எதிராக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோரும் நாட்டின் பாதுகாப்புக்காக ஒன்றிணையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய போர் வெடித்தால் இஸ்ரேலிய மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக அணிதிரள வாய்ப்புள்ளதாக எஹாப் ஜபரீனும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவ்வாறு மக்கள் ஒன்றிணைவது, மற்றொரு போரை ஆரம்பிப்பதில் நெதன்யாகு சரியான முடிவை எடுத்துள்ளார் என அவர்கள் கருதுகிறார்கள் என்பதற்கான ஆதாரமாகாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீண்டும் இராணுவப் பணிக்கு அழைக்கப்படும் படையினர், பாதுகாப்பு முகாம்களுக்குத் திரும்ப வேண்டிய குடும்பங்கள் மற்றும் முந்தைய இராணுவ நடவடிக்கையால் அடைய முடியாத இலக்குகளை இம்முறை எவ்வாறு அடைய முடியும் என்பதை அரசாங்கம் விளக்க வேண்டிய நிலைமை ஆகியவையே முக்கிய சவால்களாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான புதிய மோதல் குறித்து இஸ்ரேலில் எழக்கூடிய பிரதான கேள்வி, ‘இப்போது ஏன் போர்?’ என்பதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய போர் அவசரமானது என்பதற்கான வலுவான காரணங்கள் இல்லாத நிலையில், குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், இஸ்ரேலின் மூத்த இராணுவத் தளபதிகளும் தயக்கம் காட்டினால், அரசியல் விவாதத்தின் போக்கை மாற்றுவதற்காக நெதன்யாகு இத்தகைய முடிவை எடுப்பதாகக் கருதப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவின் நிலைப்பாடும் நெதன்யாகுவுக்கு மற்றொரு தடையாக அமையலாம்.
ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தங்களைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய மக்களின் எதிர்ப்பை விடவும், அமெரிக்காவுக்கு ஈரான் மீது மீண்டும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதில் ஆர்வம் குறைந்துள்ளதே நெதன்யாகுவின் முக்கியப் பிரச்சினை என நெவ் கோர்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து புதிய இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தால் நெதன்யாகுவுக்கு அது இலகுவாக அமையும் என இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான அரசியல் ஆய்வாளர் ஆண்டர்ஸ் பெர்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ட்ரம்பின் ஆதரவு இல்லாத நிலையில் ஈரானை நெதன்யாகு பகிரங்கமாகத் தூண்டிவிடுவது அதிகரித்தால், அதிலிருந்து அவர் அரசியல் ரீதியாகத் தப்பிப்பதும், அத்தகைய நடவடிக்கையை இஸ்ரேலிய மக்கள் ஏற்றுக்கொள்வதும் கடினமாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இடைக்கால இஸ்ரேலிய அரசாங்கங்கள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனவா?
ஆம். அவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவே பிரதமராக இருந்துள்ளார்.
2021 மே மாதம், நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகுவின் கட்சி ஆசனங்களை இழந்திருந்த நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
அந்தக் காலப்பகுதியில் காசா மீது 11 நாட்கள் நீடித்த இராணுவ நடவடிக்கையை நெதன்யாகு முன்னெடுத்தார்.
இந்தத் தாக்குதல்களில் பலஸ்தீனப் பகுதியில் குறைந்தது 260 பேர் கொல்லப்பட்டதுடன், இஸ்ரேலிலும் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த மோதல் நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகளைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்திய போதிலும், அடுத்த மாதம் நப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லாப்பிட் தலைமையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் 12 ஆண்டுகளாகப் பிரதமர் பதவியில் நீடித்த நெதன்யாகுவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.
முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர்களான எஹுட் ஒல்மெர்ட் மற்றும் யாயிர் லாப்பிட் ஆகியோரும் இடைக்கால அரசாங்கங்களின் தலைவர்களாக இருந்தபோது காசா மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவற்றில் 2008ஆம் ஆண்டு எஹுட் ஒல்மெர்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போர் மிக மோசமானதாக அமைந்தது. அந்தப் போரில் சுமார் 1,400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.










