நுவரெலியா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு! நோயாளர்கள் அவதி!!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பல மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வெளிநோயாளர் பிரிவில் கிழமை நாட்களில் நடைபெறுகின்ற மாதாந்த சிகிச்சை பிரிவு (கிளினிக்) ஆகியவற்றிற்கு வருகை தருகின்ற நோயாளர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

நீரிழிவு நோய் , இரத்தக் கொதிப்பு, நெஞ்சுவலி போன்ற மாதாந்த சிகிச்சைகளுக்காக வருகின்ற நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மருந்துப் பொருட்கள் வைத்தியசாலையில் இல்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.அவற்றை தனியார் மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளுமாறு நோயாளர்கள் அறிவுறத்தப்படுகின்றார்கள்.

வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு ஒரளவு மருந்து பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டாலும் சில மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் அவற்றை தனியார் மருந்தகங்களில் பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்.மகேந்திர செனவிரத்னவை தொடர்பு கொண்டு கேட்ட போது, அநேகமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஏனையவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே நேரம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் மருந்தகங்கள் விலை அதிகரிப்பு பொருட்கள் தட்டுப்பாடு என்ற காரணங்களை காட்டி அதிக அளவில் பணம் அறிவிடுவதாகவும் நோயாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக நுவரெலியா நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது.

துனியார் மருந்தகங்களில் விலை அதிகரிப்பு செய்யப்பட்ட மருந்துகளை நாம் பார்வையிட்டோம் ஆனால் அவை அநேகமானவை நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டே விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.அதற்கு எங்களால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது.வெறுமனே பேனாவினால் எழுதப்பட்டோ அல்லது எந்த நிறுவனத்தினது பெயரும் குறிப்பிடாமல் விலை ஒட்டப்பட்டிருந்தாலோ நாம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த அளவில் நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா பொகவந்தலாவ உடபுஸ்ஸல்லாவ வலப்பனை ஹங்குரன்கெத்த அம்பகமுவ ஆகிய அனைத்து பகுதிகளிலும் உள்ள மாகாண பொது வைத்தியசாலைகளின் நிலை இதுவே.

ஆங்கிருக்கின்ற அநேகமான வைத்தியர்கள் இந்த குறைபாடுகளையே சுட்டிக்காட்டுகின்றார்கள்.விசேடமாக தாய்மாருக்கு வழங்கப்படுகின்ற ஊட்டச்சத்து நிறைந்த மருந்து பொருட்களுக்கும் பாரிய தடடுப்பாடு நிலவுகின்றது.எனவே இது தொடர்பாக அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் தாங்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் அநேகமானவர்கள் தற்பொழுது மருந்துகளை பெற்றுக் கொள்ளாமல் வீட்டு வைத்தியத்தையே நாடுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வெளிநாடுகளில் வாழுகின்றவர்கள் எங்களுடைய உறவுகள் கவனம் செலுத்த முன்வர வேண்டும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா நிருபர் -எஸ்.தியாகு

Related Articles

Latest Articles