பதுளை மாவட்ட கொவிட் 19 தொற்றுப் பரவல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலொன்று, பதுளை மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபர் தமயந்தி தலைமையில் இன்று (06) இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, டி.பி.சானக்க, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மேஜர் தெனிபிட்டிய, சாமர சம்பத் தசநாயக்க, அ.அரவிந்தகுமார், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோரின் பங்குபற்றலுடன், இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, ஊவா மாகாணத்துக்குட்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கென, அரசாங்கத்தினால் 50,000 கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடுப்பூசிகள், இம்மாதம் 9ஆம் திகதியன்று செலுத்தப்படவுள்ளன என்று, இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தடுப்பூசிகளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த செந்தில் தொண்டமான் , பதுளை மாவட்டத்தில், 60 வயதுக்கும் மேற்பட்டோர் 1 இலட்சத்து 82 ஆயிரத்து 466 பேர் உள்ளனர் என்று எடுத்துரைத்த நிலையில், அவற்றை எவ்வகையில் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அந்த வகையில், கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகமாகவுள்ள பிரதேசங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்று, அரசாங்கத் தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.
தவிர, பதுளை மாவட்டத்தில் 7 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ள நிலையில், அவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு (2020) ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் இன்று (06) வரையான காலப்பகுதியில், 4,620 பேர், பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். நேற்றைய தினத்தில் (05) மாத்திரம், 142 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், கொவிட் 19 தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளிலுள்ள பெருந்தோட்டத் தொழிற்சாலை ஊழியர்களையும் தடுப்பூசி ஏற்றலில் உள்வாங்க வேண்டுமென்று, செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.
இதேவேளை, பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தோட்டச் சமூகநல அதிகாரிகளையும் இந்தத் தடுப்பூசி ஏற்றலுக்குள் உள்வாங்க வேண்டுமென்றும் செந்தில் தொண்டமான் அவர்கள் வலியுறுத்திய நிலையில், அவ்வதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டு தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும்,
கொவிட் 19 தொற்றுப் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக, ஹப்புத்தளை, எல்ல, பதுளை, கிராந்துருகோட்ட போன்றன அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவ்விடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்தக் கலந்துரையாடலின் போது எடுத்துரைக்கப்பட்டது.
பதுளை மாவட்டம் முழுவதும், 226 கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில், வைத்தியசாலை வசதிகளற்ற பெருந்தோட்டப் பகுதி மக்கள், போக்குவரத்துப் பிரச்சினைகளையும் எதிர்நோக்குவதால், அந்தத் தோட்டங்களில் காணப்படும் தொழிற்சாலைகள், கலாசார நிலையங்கள் போன்றவற்றை, இந்தத் தடுப்பூசி ஏற்றல் பணிகளுக்காகப் பயன்படுத்துமாறு, செந்தில் தொண்டமான் வலியுறுத்தினார்.
தோட்டங்களிலுள்ள மேற்கண்டவாறான பொது இடங்களில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றல் பணியின் போது, அம்பியூலன்ஸுடன் கூடிய வைத்திய அதிகாரிகளை அச்சந்தர்ப்பத்தின் போது கடமையில் ஈடுபடுத்துமாறும், செந்தில் தொண்டமான் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.










