அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ சில பிரச்சினைகளால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது. இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு உறுதிச் செய்யப்பட்டு வருகின்றன. விநியோகஸ்தர்கள் பலரும் இவ்வளவு படம் எப்படி தாங்கும் என முணுமுணுத்து வருகிறார்கள்.
‘கேம் சேஞ்சர்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘வணங்கான்’, ‘டென் ஹவர்ஸ்’, ‘படை தலைவன்’, ‘சுமோ’, ‘தருணம்’, ‘மெட்ராஸ்காரன்’, ‘2கே லவ் ஸ்டோரி’, ‘ப்ரீடம்’ உள்ளிட்ட படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு திட்டமிடப்படுகின்றன. இதில் சில படங்கள் அதிகாரபூர்வமாகவே தேதியினை அறிவித்துவிட்டார்கள். சில படங்கள் ஜனவரி 10ஆம் திகதிக்கும், சில படங்கள் ஜனவரி 14ஆம் திகதிக்கும் திட்டமிட்டு வருகிறார்கள்.
தற்போதைய சூழலில் ‘கேம் சேஞ்சர்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘வணங்கான்’ ஆகிய படங்களோடு ஏதேனும் இரண்டு படங்கள் வருவதே சரியாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள். ஆனால், நீண்ட விடுமுறை வருவதால் இதுதான் வெளியீட்டுக்கு சரியான தருணமாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள்.
இதனால் பொங்கல் வெளியீட்டு படங்களில் எது உறுதியாக வரும், எது வராது என்ற குழப்பம் இறுதிகட்டம் வரை நீடிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் சரியாக திட்டமிடாததே இதற்கு காரணம் என பலரும் லைகா நிறுவனத்தை கடுமையாக சாடி வருகிறார்கள்.