தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு மின்சார உற்பத்திக்காக நீரை வழங்கும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில், பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகள் பெருமளவில் தேங்கிக் காணப்படுவதாக அந்நீர்த்தேக்கத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஹட்டன் பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன், ஹட்டன் நகரில் தற்காலிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக வெளியிடங்களிலிருந்து வருகை தந்த சில வியாபாரிகள், நகரின் ஊடாகப் பாயும் நீரோடைகளில் பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகளை வீசியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், ஹட்டன் பிரதேசத்தின் சில குடியிருப்பாளர்கள் தமது வீடுகளிலிருந்து நாளாந்தம் வெளியேற்றும் குப்பைகளையும், ஹட்டன் – டிக்கோயா நகரப் பகுதிகளில் உள்ள சில வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளையும் டிக்கோயா ஆற்றில் கொட்டுவதால், அவை ஆற்றின் ஊடாக காசல்ரீ நீர்த்தேக்கத்தைச் சென்றடைந்து தேங்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக நீர்த்தேக்கத்தின் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நீர்த்தேக்கத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் பரவலாகக் காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு முக்கியமாக நீரைக் கொண்டுவரும் ஹட்டன் ஓயா வழியாக அடித்துவரப்படும் திண்மக் கழிவுகள் நீர்த்தேக்கத்திற்குள் செல்வதைத் தடுப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வலையும் தற்போது சேதமடைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு பல சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு நீர்த்தேக்கத்தின் இயற்கை அழகையும் பாதித்துள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், மீன்பிடிக்காக விரிக்கும் வலைகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சிக்கிக்கொள்வதால், பெறுமதியான மீன்பிடி வலைகளும் சேதமடைவதாக அத்தொழிலில் ஈடுபடுவோர் மேலும் தெரிவிக்கின்றனர்.
…………










