போப் லியோவைக் காணத் திரண்ட 15 இலட்சம் மக்கள்

தென் அமெரிக்காவுக்கான 12 நாள் சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பெருவின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி திருப்பலியில் போப் லியோ பங்கேற்றார்.

தன்னை முன்பு ஆயராக அறிந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்த அவர், மீண்டும் அவர்களைக் காணும் வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

ரோம் நகரிலிருந்து சுமார் 10,700 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெருவின் சிக்கிளாயோ (Chiclayo) நகருக்கு அருகிலுள்ள பாம்பாஸ் டி பிமென்டெல் (Pampas de Pimentel) என்ற பாலைவனப் பகுதியில் இந்தத் திருப்பலி நடைபெற்றது.

முன்னாள் ரொபர்ட் பிரெவோஸ்ட் என அறியப்பட்ட போப் லியோ, கடந்த ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னரும், சிக்கிளாயோ மக்களால் அன்புடன் ‘பாத்ரே’ (தந்தை) அல்லது ‘அமிகோ’ (நண்பர்) என அழைக்கப்படுகிறார்.

திருப்பலி நடைபெறும் இடத்துக்கு மக்கள் நடந்தும், வாகனத் தொடரணிகளிலும் வந்து குவிந்தனர். திறந்தவெளி போப் வாகனத்தில் மக்களைச் சந்தித்தபடி அவர் பயணித்தபோது, மக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற வத்திக்கான் கொடிகளை அசைத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

கடுமையான வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பலர் குடைகளைப் பயன்படுத்தினர். இதன்போது, ‘போப் லியோ வந்துவிட்டார்!’, ‘போப் சிக்கிளாயோவைச் சேர்ந்தவர்!’ என்ற கோஷங்கள் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தன.

திருப்பலியில் உரையாற்றிய போப் லியோ, தனது சொந்த இல்லமாகக் கருதும் சிக்கிளாயோ பகுதிக்கு மீண்டும் வருவது ஆசீர்வாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

நுரையீரல் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தப் பயணம் இடம்பெறுவது குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார். இந்த அறுவைச் சிகிச்சை காரணமாக அவரது பெரு விஜயம் ரத்துச் செய்யப்படலாம் எனப் பலரும் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

அறுவைச் சிகிச்சைக் காலத்தைத் தனது வாழ்வில் ஒரு சோதனைக் காலமாகக் குறிப்பிட்ட அவர், சிக்கிளாயோ மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

“உங்கள் முகங்களைப் பார்க்கும்போது, எனது வாழ்வில் நீங்கள் அளித்துள்ள மற்றும் தொடர்ந்து அளித்து வரும் ஆசீர்வாதத்துக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் பிரார்த்தனை என் இதயத்தில் எழுகிறது” என அவர் தெரிவித்தார்.

போப் லியோவை வரவேற்க சிக்கிளாயோ நகரின் வீதிகளிலும் திருப்பலி நடைபெற்ற இடத்திலும் சுமார் 15 இலட்சம் மக்கள் திரண்டதாக வத்திக்கான் மதிப்பிட்டுள்ளது.
தென் அமெரிக்காவில் 1.2 கோடி மக்களின் வரவேற்பு
அமெரிக்காவின் சிக்காகோ நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட போப் லியோ, தென் அமெரிக்காவின் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக தற்போது பெருவுக்குச் சென்றுள்ளார்.

ஒரு வாரத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் தென் அமெரிக்காவில் அவர் பங்கேற்ற பொது நிகழ்வுகளில் சுமார் 1.2 கோடி மக்கள் கலந்துகொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகள் மிஷனரியாகப் பணியாற்றியதுடன், 2015 முதல் 2023 வரை சிக்கிளாயோ ஆயராகவும் பணியாற்றிய பெருவைத் தனது தாய்நாடாகக் கருதுவதாக அவர் புதன்கிழமை தெரிவித்திருந்தார். போப் லியோ அமெரிக்க மற்றும் பெருவியக் குடியுரிமைகளைக் கொண்டுள்ளார்.

நுரையீரல் புற்றுநோயின் பொதுவான வகையான அடினோகார்சினோமா பாதிப்புக்காக கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டதாகவும், அது உடலின் ஏனைய பகுதிகளுக்குப் பரவவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மேலதிக சிகிச்சை அவருக்குத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் காத்திருந்த மக்கள்

வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்பதற்காகப் பலர் முந்தைய நாள் இரவே நிகழ்வு நடைபெற்ற இடத்தில் தங்கியிருந்தனர். மேலும் பலர் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே அங்கு வந்து சேர்ந்தனர்.

பல கிலோமீற்றர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், ஏராளமானோர் ஒரு பகுதி தூரத்தை நடந்தே கடந்து நிகழ்விடத்தைச் சென்றடைந்தனர்.

40 வயதான கரினா சிங்லே தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் போப் லியோவின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து அங்கு வந்திருந்தார்.

“இங்கு பெருமளவிலான மக்கள் திரள்வார்கள் என்பதை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தை நாங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை” என அவர் தெரிவித்தார்.

வீதியோரங்களில் விற்பனையாளர்கள் தொப்பிகள், சிறிய போப் பொம்மைகள் மற்றும் பெருவின் பாரம்பரிய இனிப்புப் பாண் வகைகளை விற்பனை செய்தனர்.

வெள்ளிக்கிழமை காலை லிமாவிலிருந்து விமானம் மூலம் சிக்கிளாயோவுக்கு வந்த போப் லியோ, ஞாயிற்றுக்கிழமை வரை அப்பகுதியில் தங்கியிருந்து எட்டு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

இதில், அவர் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் அவரின் கீழ் பணியாற்றிய பாதிரியார்களுடன் இடம்பெறும் தனிப்பட்ட இரவு விருந்தும் உள்ளடங்குகிறது.

பெருவின் நான்காவது பெரிய நகரமான சிக்கிளாயோவில் சுமார் 6 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். அந்நகரின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அன்புக்குரிய சிக்கிளாயோவுக்கு மீண்டும் வருகை
இரவு முழுவதும் நிகழ்விடத்தில் காத்திருந்தவர்களில் 76 வயதான மரியா எஸ்தர் சோசோ ரெய்ஸ் என்பவரும் ஒருவர். லிமாவிலிருந்து 12 மணித்தியாலங்கள் பேருந்தில் பயணித்து வியாழக்கிழமை பிற்பகல் அவர் அங்கு வந்திருந்தார்.

“சிக்கிளாயோ மக்களை அவர் நன்கு அறிவார். இங்கு வாழ்ந்துள்ளார். தனது இறைப்பணியையும் இங்குதான் முன்னெடுத்தார். எங்களுக்கு உண்மையிலேயே அவரது ஆசீர்வாதம் தேவை” என அவர் தெரிவித்தார்.

அண்டை நாடான ஈக்வடாரிலிருந்தும் சிலர் பல நாட்களுக்கு முன்னரே பயணத்தை ஆரம்பித்து நிகழ்வில் பங்கேற்க வந்திருந்தனர்.

சிக்கிளாயோவைச் சேர்ந்த 66 வயதான லுஸ்மிலா கொர்னேஜோ, போப் லியோ அங்கு ஆயராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே அவரை அறிந்தவர்.

“இது அவருக்குப் பிரியமான சிக்கிளாயோ. அவரை மீண்டும் பார்ப்பது உணர்ச்சிகரமான தருணமாக உள்ளது” என அவர் குறிப்பிட்டார்.

18 மாதங்களாக போப்பாண்டவராகப் பணியாற்றி வரும் லியோவின் பெரு விஜயத்தின்போது திரண்ட மக்கள் கூட்டமே அவரது பதவிக்காலத்தில் இதுவரை பதிவான மிகப்பெரிய மக்கள் கூட்டமாகும்.

அர்ஜென்டினாவிலிருந்து புதன்கிழமை பெருவை வந்தடைந்த அவருக்கு லிமா நகரில் சுமார் 30 இலட்சம் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர். இந்தச் சுற்றுப்பயணத்தில் உருகுவேக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.

அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 24 நாட்களுக்குப் பின்னர் தென் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த போப் லியோ, கடந்த பல தசாப்தங்களில் ஒரு போப்பாண்டவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மிகத் தீவிரமான வெளிநாட்டுப் பயணங்களில் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின்போது திறந்தவெளி போப் வாகனத்தில் மக்களைச் சந்தித்து உற்சாகமாகக் கையசைத்த அவர், லிமாவில் தங்கியிருந்த வத்திக்கான் தூதரகத்தின் பால்கனியில் எதிர்பாராத விதமாகத் தோன்றி மக்களைச் சந்தித்ததுடன், பல நிகழ்வுகளில் உள்ளூர் பாடல்களையும் பாடி மகிழ்வித்தார்.

Related Articles

Latest Articles