எதிர்வரும் சபரிமலை யாத்திரைக் காலத்தை முன்னிட்டு, இலங்கைவாழ் யாத்திரைக் குழுக்களுக்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கில் மலையக ஐயப்ப குருசுவாமிமார்களுக்கான விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் 2026 நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சரின் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்பிரதீப்பின் வழிகாட்டலில் அகில இலங்கை மலையக ஐயப்ப ஒன்றியத்தின் பங்களிப்புடன் ஹட்டன், ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கஜலட்சுமி மண்டபத்தில் காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை நடைபெறவுள்ளது.
யாத்திரை தொடர்பான முக்கிய வழிகாட்டல்களை வழங்குவதும், குருசுவாமிமார்கள் மற்றும் பக்தர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை அளிப்பதும் இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
அதற்கமைய, காலை 09:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை விழிப்புணர்வு மற்றும் சந்தேக நிவர்த்தி விளக்கவுரைகளும், பிற்பகல் 01:00 மணி முதல் 03:00 மணி வரை பிரதான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
மலையக ஐயப்ப பக்தர்களை வழிநடத்துவதில் குருசுவாமிமார்களின் ஆன்மீகத் தலைமைத்துவமும் பங்களிப்பும் இன்றியமையாதது என்பதால், இம்மாநாட்டில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு ஆசியும் பங்களிப்பும் வழங்குமாறு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ச. சிவனேசன் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.










