மேற்குலகை பகைத்துக்கொண்டே புலிகளின் கதையை முடித்தார் மஹிந்த: மார்தட்டுகிறார் வீரசேகர

“பிரபாகரனை உயிருடன் கொண்டுசெல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மஹிந்த இடமளிக்கவில்லை. மேற்குலகை பகைத்துக்கொண்டுதான் மஹிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார்.” என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மேற்குலக நாடுகளை பகைத்துக்கொண்டுதான் மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.

போர் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர்.ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டுசெல்ல முயற்சித்தனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் மஹிந்த போரை முடிவுக்கு கொண்டுவந்தார்.

1987 வடமராட்சி சமரின்போது இந்தியா பருப்புபோட்டவேளை, ஜேஆர் ஜயவர்தன போரை நிறுத்தினார். அன்று போரை நிறுத்தி இருக்காவிட்டால் 4, 5 நாட்களில் போர் முடிந்திருக்கும்.

வெளிநாடுகளுக்கு பணிந்து அன்று போரை நிறுத்தினர். மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. மேற்குலகை பகைத்துக்கொண்டு போரை முடிக்க அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார். அதனால்தான் மஹிந்தவுடன் மேற்குலகம் பகையாக உள்ளது. தமிழ் பிரிவினைவாத டயஸ்போராக்களும் அவர்மீது பகை வைத்துள்ளனர். இதனால் மஹிந்தவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.” -என்றார்.

Related Articles

Latest Articles